Sunday, 27 September 2020

அருட்தந்தை கேள்வி பதில்கள்

கேள்வி : சுவாமிஜி, அகத்தவம் செய்யாமலே மனிதன் நல்வாழ்வு வாழ்ந்து இறைநிலை அடைய முடியாதா?



மகரிஷியின் பதில் : மனிதன் இரண்டடுக்கு வினைப்பயனை உடையவன். பிறந்தது முதல் இன்று வரை என்னென்ன செயல்களைச் செய்தானோ அது பிராரப்த கர்மம் எனப்படும். கருவழியே அவனது முன்னோர்களிடமிருந்து என்ன பதிவுகளைப் பெற்றானோ அது சஞ்சித கர்மம் என்று சொல்லக்கூடிய பழவினையாகும். இவையிரண்டும் சேர்ந்த தொகுப்பே ஒரு மனிதனின் தன்மை (Personality) ஆகும்....

இதன் வழியாகத்தான் மனிதன் செயல்களைச் செய்து கொண்டே போவான். இந்தப் பதிவுகளில் நல்ல பதிவுகளும் உள்ளன, துன்பம் விளைவிக்கும் தீயபதிவுகளும் உள்ளன. தீயவற்றைத் தவிர்த்து நல்ல பதிவுகளையே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தீய பதிவுகள் அவ்வப்பொழுது தோன்றித் தீய செயல்களைச் செய்ய வைத்து, அதன் மூலமாகத் துன்பங்களை மனிதன் அடைய வேண்டியிருக்கும். இவ்வாறு வாழ்வின் நோக்கத்திற்கு முரணான தீயபதிவுகள் அதிகரித்துக் கொண்டே போனால் பிறவிகள் பல பெருங்கடலாக நீளும். வாழ்வில் சலிப்புதான் ஏற்படும்.

அப்படியின்றி, துன்பத்திற்கு முடிவு கட்ட வேண்டும். வேண்டாத பதிவுகளை மாற்றியமைக்க வேண்டும். இந்த விஷயத்தில் தான் இன்று பழக்கத்திற்கும், விளக்கத்திற்குமிடையே மனிதன் போராடிக் கொண்டிருக்கின்றான்.

எண்ணம், சொல், செயல் ஆகிய இம்மூன்றிலான பழக்கப் பதிவுகளிலிருந்து மனிதன் விடுபட்டு, தான் விரும்பிய நல்வழியில் செல்ல அவனுக்கு முறையான உளப்பயிற்சி முறை வேண்டும். அதைத்தான் நமது சித்தர் பெருமான் திருமூலர் ஒரு கவியில்,

"திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்க இருவழி யுண்டு
தனக்கும் கிளைக்கும்அக் கேடில் முதல்வன்
விளைக்கும் தவம்அறம் மேற்றுணை யாமே.

என்று குறிப்புட்டுள்ளார்.

வாழ்க்கை என்ற சிறிய தோணியைப் பற்றிக் கொண்டு கடல் போன்ற வினையை கடக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ள மனிதன், அதிலிருந்து வெளிவர இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று தவம்; மற்றொன்று அறம். இவையிரண்டையும் செய்தால் அவன் மாத்திரம் அல்லாமல் அவனுக்குப் பின்வரும் சந்ததிகளும் நன்மை பெறுவார்கள் என்கிறார்.

மனதை உயிர்மேல் வைத்து, ஒடுங்கி நின்று தவம் செய்யும் பொழுது, மன அலை விரைவு குறைந்து, உயிரின் தன்மையை உணர்கிறான். வினையின் பதிவுகள் அவற்றின் பிரதிபலிப்புகள் இவற்றை உணர்கிறான். தகாத தீய வினைப்பதிவின் காரணமாக உடலிலே வரக்கூடிய நோய்களையும், மனதில் வரக்கூடிய களங்கங்களையும் அறிந்து அறநெறி மூலம் அகற்றிக் கொள்கிறான்.

மனிதன் மனிதனாக வாழவேண்டுமானால் அதற்கு முறைப்படுத்தப்பட்ட உளப்பயிற்சி வேண்டும். அப்பயிற்சிக்குத்தான் அகத்தவம் என்று பெயர். அகத்தவமின்றி மன அலைச் சுழல் குறையாது. விளைவறிந்த விழிப்புநிலை வராது. பதிவு நீக்கம் பெற முடியாது. வீடுபேற்று நிலைகிட்டாது. வாழ்வின் நோக்கம் நிறைவேறாது. ஆகவே நல்வாழ்வு பெற அகத்தவம் மிக மிக அவசியம்.

சிக்கல்களில் அகப்பட்டுக் கொள்ள காரணம் என்ன?

கேள்வி : அருள்தந்தை அவர்களே, ஆன்மீக வழியிலே நமது வாழ்க்கையை வகுத்துக் கொண்டாலும், சில சமயங்களில் சிக்கல்களில் அகப்பட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறதே - இதற்குக் காரணம் என்ன? இதை மாற்ற வழி இல்லையா?

மகரிஷியின் பதில் : மனித வாழ்க்கையில் துன்பமும், துயரமும் நேர்வதற்கு 3 சூழ்நிலைகள் உள்ளன.

 அவை :

1) ஆகாம்ய கர்மம்,...
2) பிராரப்த கர்மம்,
3) சஞ்சித கர்மம்.

சஞ்சித மர்மம் என்பது நமது முன்னோர்கள் செய்த புண்ணிய பாவத்தின் தொகுப்பாகும். அவை வழி வழியாகச் சந்ததிகளுக்கு வந்து சேரும் வினைப்பதிவாகும். எனவேதான் ஒரு மனிதனானவன் தான் எந்தத் தவறும் செய்யாவிட்டாலும் கூட துன்பமும் தூரமும் அவனது வாழ்க்கையில் உண்டாகித் கொண்டிருக்கின்றன. சஞ்சித கர்ம வினைப்பதிவுகளைத் தீர்த்துக் கொள்ள கீழ்க்காணும் மூன்று வழிகள் உள்ளன.

 அவை :

1) பிராயச்சித்தம்
2) மேல்பதிவு
3) தவம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Sunday, 20 September 2020

அருட்தந்தை கேள்வி பதில்கள்

சுவாமிஜி அவர்களே... பெற்றோர்களின் வினைத் தொடரே குழந்தைகள் என்றால் நற்குணம் படைத்த பெற்றோர்களுக்குத் தீயகுணம் படைத்த குழந்தைகளும்,தீயகுணம் படைத்த பெற்றோர்களுக்கு நற்குணம் படைத்த குழந்தைகளும் உருவாவது எவ்வாறு.../...

 சுவாமிஜி அவர்களின் பதில்கள்...

பரிணாமத்தில் வந்த பிறவித் தொடரில் எண்ணற்ற பதிவுகள் மனிதனிடத்தில் இருக்கும். அவற்றை ஆழ்நிலைப் பதிவு ,மேல்நிலைப் பதிவு என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். தீயகுணம் உள்ளே அடங்கி இருக்கும் போது நற்குணம் செயலுக்கு வந்து கொண்டிருக்கும்.அப்போது நல்லதையே செய்வான்; நல்ல மனிதனாகவே வாழ்வான்.
உள்ளே அடங்கி இருக்கும் தீய குணங்களையும், தீய செயல்களையும் விரிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம். அவை கருமையத்திலே மட்டும் ஆழ்நிலை பதிவாக இருக்கும். அவனுடைய வித்துவின் மூலம் பிறவிதொடராகத் தோன்றும் குழந்தைகளிடம் அந்த எண்ணங்கள் எழுர்ச்சி பெரும். அதனால் அந்தக் குழந்தைகள் அவர்களின் பெற்றோர் செய்ய முடியாமல் விட்டு விட்ட தீய செயல்களும் செய்கிறார்கள்.
அதேபோல், நல்ல எண்ணங்களெல்லாம் ஒருவரிடம் அடக்கமாகவும் இருக்கலாம். வேறு வழி இல்லாது ஒருவர் கசாப்புக்கடை வைத்திருப்பவராக இருக்கலாம். அவர் மனதில் தூய்மையான பணி செய்தால் நல்லது என்ற எண்ணமே மேலோங்கி இருக்கலாம். அப்போது அவருக்குப் பிறக்க கூடிய குழந்தை அந்த நல்லெண்ணத்தைப் பதிவாகப் பெற்று இருக்கும். எந்த எண்ணத்தை மனதில் வைத்திருந்து அதைச் செயல்படுத்த முடியவில்லையோ அவை கருதொடரான குழந்தை வாயிலாகச் செயலுக்கு வரும் பொது அவருடைய குழந்தை உயர்ந்த எண்ணமுடையதாக இருக்கிறது.

அதே போல, ஒருவர் பூஜைகளெல்லாம் செய்து கொண்டிருப்பவர். அதே நேரத்தில் வருகின்றவர்களிடமெல்லாம் என்ன பறிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்குப் பிறக்கும் குழந்தை பிறர் வளம் பறித்தலில் முதலிடம் வகிக்கும்.

தீய பதிவுகளைத் தவிர்க்க வேண்டுமெனில் தவத்தினால் விளைவறிந்த விழிப்பு நிலையில் நின்று, செயலுக்கு உரிய விளைவைக் கணித்து, தீய பதிவுகள் எழாது காத்துக் கொள்ளும் நற்பண்பைப் பழக்கத்தில் கொண்டுவர வேண்டும். இதனை ''மனவளக்கலையில்'' கற்றுக் கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்

Sunday, 13 September 2020

இறைவனைக் கண்டு கொண்டேன்: அ/நி அட்சயா அவர்கள்

 


அருட்தந்தை கேள்வி பதில்கள்

ஆன்மநிலை அறிவது ஏன்?

ஆன்மநிலையறிவதனால் யாது பயன்? என்று சிலருக்கு ஒரு கேள்வி பிறக்கலாம்.

பல காரணங்களாலும் வளர்ந்து கொண்டே இருக்கும் அறிவின் சக்தி புலன்கள் ஐந்திலும் இயங்கி, தன் தத்துவங்களாகிய உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐந்து பகுதிகளையும் அறிந்துவிட்ட பின் மேலும் வேகம் அதிகரித்து மீதியாகவும், அறியப்படாததும் ஆகிய தன் ஆதி நிலையை, அரூபசக்தி தத்துவத்தை, அறியும் ஆர்வமாக ஒரு எழுச்சி பெறுகிறது.

இவ்வகையில் வேகம் கொண்ட அறிவுக்கு எவ்வளவு தான் புலன்களின் வாயிலாக அனுபோகங்கள் கிடைத்த போதிலும், அதனால் முழுத் திருப்தியும், அமைதியும் பெற முடியாது குறைவுபட்டே நிற்கிறது. அந்தப் பக்குவத்தின் தன்னிலையை அறிந்து விட்டால் எழுந்த வேகம் தணிந்து முழுப் பயன் பெற்று விடுகிறது.

உதாரணம் : ஒரு ஆற்றில் தண்ணீர் வருகிறது. குறுக்கே பல ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் இருக்கின்றன. ஆற்றுநீர் அந்தப் பள்ளங்களை நிரப்பும் வரையில் அதைத் தாண்டிப் போகாது. நிரம்பி விட்டபின் அதன் வேகம் மேலும் முன்னோக்கி ஓடுகிறது. ஒரு மேடு, மலை குறுக்கிட்டாலும் அதைச் சுற்றிக் கொண்டு சென்று கடைசியாகக் கடலில் சங்கமமாகி விடுகிறது. அதன் வேகம் அத்துடன் முடிகிறது.

அதுபோலவே அறிவின் வேகத்திற்கேற்றபடி புலன்களின் மூலம் இயங்கி, மிகுதி வேகம் தன்னையறிந்த பிறகு முடிவடைகிறது. மேலும் தன்னிலையாகிய ஆதி தத்துவம் அறிந்தபின், அங்கே அறிவின் தத்துவமும் அதன் இயக்கம், முடிவு என்பனவும் தெரிந்து விடுவதால் தானே பல உடலுருவாய் இயங்கும் ஒருமைத் தத்துவமும் இன்ப துன்பங்களின் காரணம், எழுச்சி, மாற்றம் அனைத்தும் தெளிவாக விளங்கி விடுகின்றன. இந்நிலையில் அறிவு அமைதியைப் பெறுகிறது.

.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"ஆகாசம் உயிராக இருக்கிறது. அது உடலில் இயங்குவதால்
உடலுக்கு ஒரு காந்த இயக்கம் கிடைக்கிறது"

.
"ஆசையின் இயல்பறிந்து அதை நலமே விளைவிக்கத் தக்க
வகையில் பயன்படுத்தி ஒழுங்குபடுத்திவிட்டால்
அதுவே ஞானமாகவும் மலரும்".

.
"அவரவர் வாழ்வைச் சீரமைக்கும்
அற்புத சிற்பி அவரவர் எண்ணங்களே".

.
"வெளிச்சத்திலே இருள் நிறைந்திருப்பது போல
அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கிறன்றது".

.
"இறை நிலையோ டெண்ணத்தைக் கலக்கவிட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறை நிலையே தானாக உணர்வதாகும்.
நித்த நித்தம் உயிர் உடலில் இயங்கு மட்டும்
உறைந்து உரைந்திந் நிலையில் பழகிக்கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
கரை நீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்
கரைந்துபோகும் தன் முனைப்பு காணும் தெய்வம்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Sunday, 6 September 2020

அருட்தந்தை கேள்வி பதில்கள்

அருட்தந்தை கேள்வி பதில்.

“குருவின் பாதங்கள்” என்றால் என்ன?

சந்தேகங்களுக்கு விளக்கம். – யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி – 

ANBOLI JAN. 1987

கேள்வி:

“குருவின் பாதங்கள்” என்றால் என்ன?
...

பதில்:

இதற்கு விளக்கம் “குரு, தன்னை பின்பற்றுகிறவர்கள் ஆன்மிகத்தில் உயர வகுத்து கொடுத்துள்ள பாதை” என்பதாகும்.
மணலில் நடக்கும் மனிதன் தன பாதச்சுவடுகளை விட்டுவிட்டுசெல்லும்போது அதை பின்பற்றி வருகிறவர்களுக்கு அது பெரிதும் உதவும்.
“குருவின் பாதங்கள்” எனபது “குரு வகுத்து கொடுத்த ஆன்மிக பயிற்சிகள், தத்துவங்கள்” என்று கருதவேண்டும்.

குறிப்பு:

இந்த குருவின் பதிலை ஏற்று குரு பாதங்களை படமாக போட்டு அதற்க்கு பூ அலங்காரம் செய்வதை விடுத்து, பயிற்சிகளை செய்வதிலும் மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்தி குருவுக்கு உண்மையான சேவை செய்வோம்.

வாழ்க வளமுடன்

Saturday, 5 September 2020

குருவின் சேர்க்கை

குருவின் சேர்க்கை

அறிவு இயக்கமற்ற நிலையிலே உள்ள இருப்பு நிலைக்குப் போகும் அளவுக்கு நுண்மை பெற்றபோது அதுவும், பிரம்மம் (ஆதி) என்ற ஒரு நிலையம் ஒன்றுபட, அந்த இடத்தில் அறிவு அசைவற்று நின்று, ஆதியும் அறிவும் ஒன்றாகி விடுகிறது. அந்த குறிப்பைத்தான் சமம் + ஆதி = சமாதி என்று சொல்வார்கள். ஆதிக்குச் சமமாக அறிவு நிற்கும் நிலைதான் 'சமாதி'. இந்த நான்கையும் மனோபயிற்சியாக, பதஞ்சலி யோக சூத்திரத்தில் சொல்வார்கள். நாம் "மனவளக்கலை" என்கிறோம்.

உயிர் மேலே எழுப்பப்பட வேண்டும். அதன் இயக்கத்தை, இயக்க மையத்தை மாற்றியமைக்க வேண்டும். அதுவே யோகத்திற்கு முதல் படியாகும். அதற்கென நீண்ட காலம் செலவிட முடியாது. நாம் "உலக சமுதாய சேவா சங்கத்தின்" மூலமாகக் "குண்டலினியோகத்தை" வெகு எளிமையாக்கி விட்டோம். மூச்சுப் பயிற்சி வேண்டியது இல்லை. மந்திர ஜெபம் தேவை இல்லை. முதலிலேயே அந்தப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் போதிய ஆற்றல் பெற்றிருக்கிறார்கள். அந்த ஆற்றலைக் கொண்டு மூலாதாரத்தில் தொட்டு, மேலே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள். இதை ஸ்பரிச தீட்சை என்று சொல்வார்கள். தொட்டு உணர்த்திய உடனே, பயிற்சியாளர் குருவின் ஆற்றல் மூலம் தனது உயிராற்றலை உணர்கிறார் (the life force of the aspirant responses to the life force of the master) அதுதான் உண்மை.

குருவே வந்து, உயிர்ச்சக்தியைக் கொடுத்து விடுகிறாரா என்றால் இல்லை. தூண்டி விடுகிறார். தன்னுடைய ஆற்றலைச் சிறிது பாய்ச்சி, அதை வேகம் கொள்ளச் செய்து தூண்டிவிடுவது (Stimulate) தான் குருவின் ஆற்றல். ஆனால் தூண்டும் போது 'பாலுக்கு உரை ஊற்றுவது' போல, குருவினுடைய தன்மையையும் அடைகிறது. அறிவில் முழுமை பெற வேண்டும் என்ற எண்ணமும், இறைநிலையை அடைய வேண்டும் என்ற ஒரு பொறுப்பும் வர வேண்டுமானால் அதற்கு உயிர் அறிந்தவர்களுடைய உயிர் (தீட்சை) சேர வேண்டும். குருவின் உயிர்ச்சக்தியும் சிறிது சேரும்போது தான் உடலோடு எடுத்த பிறவி மாத்திரம் அல்லாது, அறிவுக்கு ஒரு பிறவியும் உணடாகி விடுகிறது.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.