Thursday, 28 June 2018

ஞானக்களஞ்சியம் கவிகள் - விளக்கஉரை

ஞானக் களஞ்சியம் கவிகள் - வேதாத்திரிய தத்துவ விளக்க உரைகள்

இறைவணக்கம்
கவி: 1
ஆதியெனும் பரம்பொருள்மெய், எழுச்சிபெற்று
 அணுவென்ற உயிராகி அணுக்கள்கூடி
மோதியிணைந்து இயங்குகின்ற நிலைமைக் கேற்ப
 மூலகங்கள் பலவாகி அவையிணைந்து,
பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்
 பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி,
நீதிநெறி உணர் மாந்தராகி , வாழும்
 நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம். 1955

தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

 ஆதி என்றால் அதற்கு முன்னதாக என்று கூறுவதற்கு எதுவுமில்லை. எனவே அனாதி எனலாம். பரம் என்றால் அதைவிடப் பெரியதுமில்லை. நுண்ணியதுமில்லை. பொருள் என்றால், எது நீடித்ததோ, நிலைத்தோ, மாறாததோ அதுவே உண்மைப்பொருள் சத்தியப்பொருள். மெய் என்றால் உடலென்ற பொருளும் வரும். உண்மை என்ற பொருளிலும் பயன்படுத்துகிறோம். நாம் சாதாரணமாகத் தோற்றப் பொருட்களையே பொருள் என்று கூறிப் பழகியுள்ளோம். அதனால்தான் வள்ளுவரும் “பொருள் அல்லவற்றைப் பொருள் என்று கூறும் மருளானாம் மாணாப் பிறப்பு” என்கிறார்.
 ஆதியாகிய, மெய்ப்பொருள், இப்படித்தான் இயங்கவேண்டும் என்ற தன் அறிவாலும், தனது ஆற்றலாலும் இருப்பாக இருந்தது எழுச்சி பெற்று, இயக்க மலர்ச்சியில் அணு என்ற உயிராகியது. மெய் அசைந்தால் அது உயிர், அணுக்கள் நெருங்கி இயங்கும்போது மூலகம் என்ற நிலையில் நிலம், நீர், நெருப்பு, காற்று எனும் பௌதீகப் பிரிவுகளாகி, பௌதீகப் பிரிவுகள் இணைந்து எண்ணிலடங்காத கோள்களை உள்ளடக்கிய பேரியக்க மண்டலமாகியது. எண்ணிலடங்காத கோள்களில் ஒரு கோள் ஆகிய நிலவுலகத்தில் 5 பௌதீகப் பிரிவுகளும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இணைந்து ஒன்றையொன்று காக்கும்படியான அமைப்பில் காந்தச் சுழலும் கருமையமும் அமைந்த போது, சடமாக இருந்தது ஜீவன் என்ற நிலையில் மலர்ச்சி பெற்றது.
 உணர்தல் என்ற சிறப்பில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை தன்நிலையில் மாற்றம் பெற்றது. இயற்கை நியதியை அறிந்து தெளிந்து ஆறாவது அறிவு பெற்ற மனிதர், வாழ்வின் நோக்கத்தையும், பிறவியின் நோக்கத்தையும் உணர்ந்து ஒத்தும் உதவியும் இனிமயாக வாழ்வோம்.
 மெய்யியல், விண்ணியல், பிரபஞ்சவியல், உயிரியல், மானுடவியல் ஆகிய அனைத்து அறிவியலும் இணைந்துள்ள சுருக்கமான விளக்கத்தை இந்த இறைவணக்கக் கவி உணர்த்துகிறது.

விளக்க உரை : இரா. மாரியம்மாள் மோகன்தாஸ்
வேதலோக அன்பு நிலையம் அறக்கட்டளை
www.vethaloka.org
K.Pudur MVKAMM Trust, Madurai
www.facebook.com/vethathiri.gnanam

No comments: