Sunday, 20 September 2020

அருட்தந்தை கேள்வி பதில்கள்

சுவாமிஜி அவர்களே... பெற்றோர்களின் வினைத் தொடரே குழந்தைகள் என்றால் நற்குணம் படைத்த பெற்றோர்களுக்குத் தீயகுணம் படைத்த குழந்தைகளும்,தீயகுணம் படைத்த பெற்றோர்களுக்கு நற்குணம் படைத்த குழந்தைகளும் உருவாவது எவ்வாறு.../...

 சுவாமிஜி அவர்களின் பதில்கள்...

பரிணாமத்தில் வந்த பிறவித் தொடரில் எண்ணற்ற பதிவுகள் மனிதனிடத்தில் இருக்கும். அவற்றை ஆழ்நிலைப் பதிவு ,மேல்நிலைப் பதிவு என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். தீயகுணம் உள்ளே அடங்கி இருக்கும் போது நற்குணம் செயலுக்கு வந்து கொண்டிருக்கும்.அப்போது நல்லதையே செய்வான்; நல்ல மனிதனாகவே வாழ்வான்.
உள்ளே அடங்கி இருக்கும் தீய குணங்களையும், தீய செயல்களையும் விரிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம். அவை கருமையத்திலே மட்டும் ஆழ்நிலை பதிவாக இருக்கும். அவனுடைய வித்துவின் மூலம் பிறவிதொடராகத் தோன்றும் குழந்தைகளிடம் அந்த எண்ணங்கள் எழுர்ச்சி பெரும். அதனால் அந்தக் குழந்தைகள் அவர்களின் பெற்றோர் செய்ய முடியாமல் விட்டு விட்ட தீய செயல்களும் செய்கிறார்கள்.
அதேபோல், நல்ல எண்ணங்களெல்லாம் ஒருவரிடம் அடக்கமாகவும் இருக்கலாம். வேறு வழி இல்லாது ஒருவர் கசாப்புக்கடை வைத்திருப்பவராக இருக்கலாம். அவர் மனதில் தூய்மையான பணி செய்தால் நல்லது என்ற எண்ணமே மேலோங்கி இருக்கலாம். அப்போது அவருக்குப் பிறக்க கூடிய குழந்தை அந்த நல்லெண்ணத்தைப் பதிவாகப் பெற்று இருக்கும். எந்த எண்ணத்தை மனதில் வைத்திருந்து அதைச் செயல்படுத்த முடியவில்லையோ அவை கருதொடரான குழந்தை வாயிலாகச் செயலுக்கு வரும் பொது அவருடைய குழந்தை உயர்ந்த எண்ணமுடையதாக இருக்கிறது.

அதே போல, ஒருவர் பூஜைகளெல்லாம் செய்து கொண்டிருப்பவர். அதே நேரத்தில் வருகின்றவர்களிடமெல்லாம் என்ன பறிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்குப் பிறக்கும் குழந்தை பிறர் வளம் பறித்தலில் முதலிடம் வகிக்கும்.

தீய பதிவுகளைத் தவிர்க்க வேண்டுமெனில் தவத்தினால் விளைவறிந்த விழிப்பு நிலையில் நின்று, செயலுக்கு உரிய விளைவைக் கணித்து, தீய பதிவுகள் எழாது காத்துக் கொள்ளும் நற்பண்பைப் பழக்கத்தில் கொண்டுவர வேண்டும். இதனை ''மனவளக்கலையில்'' கற்றுக் கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்

No comments: