*தினம் ஒரு முத்திரை*
*அஞ்சலி முத்திரை*
தமிழில் யாரையாவது பார்க்கும்போது, இரு கரம் கூப்பி வணக்கம்
என்கிறோம். இதையே, வடமொழியில் 'நமஸ்காரம்' அல்லது
'நமஸ்தே' என்கிறோம். நமஸ்தே என்றால், நான் உங்களை
வணங்குகிறேன் என்று பொருள்.
இரு கரம் கூப்பி வணங்குவதில் மூன்று முறைகள் உள்ளன.
1. கைகள் மார்புக்கு நேராக வைத்து வணங்குதல்.
2. கைகளை முகத்துக்கு நேராக வைத்து வணங்குதல்.
3. கைகளைத் தலைக்கு மேலாக வைத்து வணங்குதல்.
முதலாவது முறையில் பெற்றோர், பெரியோர் ஆகியோரை வணங்க
வேண்டும். இதனால் அன்பு அதிகரிக்கிறது. மார்புப் பகுதியில் அனா
ஹதச் சக்கரம் உள்ளது. அன்புக்கு உறைவிடமாக இது திகழ்கிறது.
எனவேதான், மார்புக்கு நேராக கையை வைத்து வணங்குகிறோம்.
இரண்டாவது முறையில் குரு, ஆசிரியர் ஆகியோரை வணங்க
வேண்டும். அறிவைக் கொடுத்து ஞானம் ஏற்படச் செய்பவர் ஆசிரியர்.
இறைவனை அடைய வழிகாட்டுபவர் குரு அல்லது ஆச்சாரியார்.
மேலும், இரு புருவங்களுக்கு மத்தியில் இருப்பது ஆக்ஞா சக்கரம்.
இது மூன்றாவது கண்ணாகும். ஞானம் இங்கிருந்துதான் பிறக்கிறது.
மூன்றாவது முறையில் இறைவனை வணங்க வேண்டும். இது
சரணாகதி தத்துவத்தை விளக்குகிறது. திரௌபதி துகிலுறியப்பட்ட
போது, வேறு வழியில்லாமல் கிருஷ்ணனை துதித்து தன் இரு கைகளையும், மேலே தூக்கி வணங்கி சரணாகதி அடைந்தாள்.
இறைவன் அவளது மானத்தைக் காத்தருளினார். தலையின்
மேற்பகுதியில் சகஸ்ராரச் சக்கரம் உள்ளது. நம்மை தெய்வ சக்தியோடு
இணைப்பது இந்தச் சக்கரம்தான்.
*செய்முறை*
இரண்டு உள்ளங்கைகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு வைத்துக்
கொள்ள வேண்டும். இரண்டு பெரு விரல்களும் மார்புப் பகுதியைத்
தொட வேண்டும். இரண்டு கைகளும், விரல்களும் இடை
வெளியின்றி ஒன்றோடொன்று இணைந்திருக்க வேண்டும். வலது
கை விரல்கள், இடது கை விரல்களைத் தொட்டுக்கொண்டிருக்க
வேண்டும். தலையைச் சிறிது தாழ்த்தி கண்களை மூடியபடி இருக்க
வேண்டும்.
*வேலை செய்யும் விதம்*
ஆதி காலத்தில், சீனர்கள் சக்தியை (Energy) 'யின்' மற்றும் 'யாங்'
என்று இரண்டு பிரிவாகப் பிரித்தார்கள். இந்த இரண்டு சக்திகளும் நேர்
எதிரானவை. இந்த இரண்டு உயிர் சக்தியைப் பொறுத்துத்தான் உடல்
ஆரோக்கியம் அமைந்துள்ளது. இவற்றின் ஏற்ற இறக்கத்தின்
காரணமாகவே நோய்கள் ஏற்படுகின்றன. இந்த இரண்டும், ஒன்றை
ஒன்று சார்ந்தே இருக்கும், தனித் தனியாக இயங்க முடியாது.
நம் ஹிந்து மதத்தில், சிவன் அர்த்தநாரியாகக் காட்சி தருகிறார்.
சிவனின் உடலில் இடப்பக்கத்தில் பார்வதி இருக்கிறார். சிவன்,
பாசிடிவ் சக்தி; பார்வதி, நெகடிவ் சக்தி. இருவரும் சேர்ந்து
இயங்கினால்தான், இந்த உலகமே இயங்க முடியும்.
நமது வலது கை நேர் சக்தி, இடது கை எதிர் சக்தி. இரண்டும்
இணையும்போது சக்தி ஓட்டம் ஏற்பட்டு நிறைவு பெறுகிறது.
இதனால், உடலில் உள்ள பிராண சக்தி நிலையாக இருக்கும். நமது
சக்தியை மற்றவர்களால் ஈர்க்க முடியாது. அவர்களின் தவறான
செயல்களும், எண்ணங்களும் நம்மை அண்டாது, நம்மை எதுவும்
செய்யாது.
அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் இரு கரம் கூப்பி
வணங்குதல் நல்லது. இதனால், அடக்கமும் அமைதியும் உண்டாகும்.
பணிவு ஏற்படும். நன்றியின் அடையாளமாகவும் இதைக்
கொள்ளலாம்.
*பலன்கள்*
1. மன அழுத்தம் குறையும்.
2. மூளை அமைதி அடையும்.
3. நமது தலையில் உள்ள இரு பக்க மூளைகளும் இணைந்து
செயல்படும். இதனால், உடலின் செயல் திறன், கற்பனைத் திறன்,
புதிய படைப்புகளைப் படைக்கும் ஆற்றல் உண்டாகும்.
4. நம்மை யாரும் வசியப்படுத்த முடியாது.
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment