Tuesday, 21 August 2018

தினம் ஒரு மாற்றம் (21/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

தினம் ஒரு மாற்றம் (21/08/2018)

குறள் 48:
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

விளக்கம் 1:
மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

விளக்கம் 2:
மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.

English Couplet 48:
Others it sets upon their way, itself from virtue ne'er declines;
Than stern ascetics' pains such life domestic brighter shines

Couplet Explanation:
The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance

*30/08/2018 அன்று அன்னை லோகாம்பாள் அம்மையார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அருட்தந்தை அவர்கள் அவர்களது மனைவியை மதித்துப் போற்றி அந்த நாளை "மனைவி நல வேட்பு நாளாகக்" கொண்டாடி மகிழ்கின்றோம்.*

மனைவிக்கு நன்றி செலுத்தும் நாளாகவும், கணவர் மனைவி ஒருவருக்கொருவர் மதித்து, குடும்பத்தில் ஒற்றுமை நிலவவும், இருவரும் அனுசரித்து வாழ்க்கையின் இனிமையான  நாட்களை அன்பால் நிரப்பி, குடும்ப நல் உறவுகளுடனே நம்பிக்கை வளர்த்து, நற்பண்பு போற்றி, நேர்மறை எண்ணங்களையும் அறநெறிகளையும், கடைபிடித்து  வாழ்க்கையில் வெற்றியும், மகிழ்ச்சியும், மனநிறைவோடும், நல்வாழ்வு வாழ, இந்த நாளில் செய்யும் உயிர்கலப்பு தவம், கணவர் மனைவியிரிடையே ஒரு இனிமையான பிணைப்பை ஓங்கச் செய்து வாழ்நாள் முழுதும் அந்தக் காந்த பரிமாற்றம் தக்க வைக்கக்கூடியதாகவும் இருக்கும்.

மனவளக்கலைஞர்கள் மட்டும் அல்லாது பிறரும் இந்த நாளை பயன்படுத்தி அவர்களின் குடும்ப ஒற்றுமைக்கு நல்வாய்ப்பாகக் கருதி இத்தவத்தில் கலந்து கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ வழி வகை செய்ய இந்த நாள் பேருதவியாக  இருக்கும்.

*மனைவிக்கு மரியாதை அளித்தது மட்டுமல்லாது Wife's Appreciation Day என்று  கணவன்மார்கள் "மனைவிக்கு மரியாதை" அளித்து நன்றி செலுத்த நல்வாய்ப்பை அமைத்துக் கொடுத்த நமது மகான் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி  அவர்களையும் அன்னை லோகாம்பாள் அம்மையாரையும்  என்றென்றும் நாம் நன்றி நினைவுடன் நமது அன்பை நன்றியாக செலுத்த  கடமைப்பட்டு இருக்கின்றோம்*.🙏

*வாழ்க வளமுடன்!*
*வாழ்க வளமுடன்!*

*என்றும் நமது உயிர்கலப்பில்  வாழும்..*

*அருட்தந்தை  வேதாத்திரி மகரிஷி அவர்களும், அவர்களது அன்புத் துணைவியாரும்.*

*வாழ்க வளமுடன்!*
*வாழ்க வளமுடன்!*

அன்புடன் ஜெ.கே

தினம் ஒரு மாற்றம் (20/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (20/08/2018)

குறள் 512:
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.

விளக்கம் 1:
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

விளக்கம் 2:
பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.

English Couplet 512:
Who swells the revenues, spreads plenty o'er the land,
Seeks out what hinders progress, his the workman's hand.

Couplet Explanation:
Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it).

எப்பொழுதும் விளைவை பற்றி யாருமே யோசிக்காமல் பேசுவது, செயல்புரிவது என்பதில் தான் நாட்டம் அதிகம் உள்ளது பெரும்பாலானவர்களுக்கு.

விளைவு இன்பம் தருவதாக இருந்தால் அதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
விளைவு துன்பம், கவலையாக இருந்தால் உடனே சோகம், கோபம், பொறாமை என்று பல் வேறு விளைவுகள்.... ஒவ்வொருவருக்குள்ளே பலவித உணர்ச்சிகள் மனதில் உலாவரும்.

எது நலம் தரும் விளைவு??

ஒருவருக்கு ஒரு எண்ணம் உதிக்கும் போதே அது தனக்கும் பிறர்க்கும் நன்மை தரக் கூடியதா?? தன்னை சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மை தருமா?? சமுதாயத்திற்கும் இதனால் நலம் விளையுமா??
என்றெல்லாம் தனக்குள்ளே கேள்வி கேட்டு அதற்கெல்லாம் பதில் ஆம் , செய்யலாம் , ஒத்து வரும், என்று பதில் மனதிற்குள் வந்தால் அதை முழு மனதுடன் நிறைவேற்றலாம்.

ஒரு விஷயத்துக்கு இவ்வளவு எல்லாம் யார் யோசித்து செய்வார்கள்? அப்படியே துன்பம் வந்தாலும் நான் தானே அனுபவிக்கப் போகிறேன் என்று ஒருவரின் பதில் இருக்குமானால் அவர்கள் சுயமாக சிந்தித்தேத் தெளிக.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நலமில்லை இருந்தது என்றால் அவர் பார்க்கும் வேலையை யார் செய்வது??
ஒருவர் துன்பத்தில் இருக்கும் போது சதா சர்வ காலமும் அவர்கள் உடல் இயல்பு நிலைக்கு வரும் வரை கவலை இருப்பது நியாயம் தானே...

அப்படி இருக்கும் போது வீட்டில் ஒருவரின் நோய் அல்லது துன்பம் வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் துன்பம் என்பது யாருக்கும் புரிவதில்லை. இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.. இப்படி பல வினைகள் உண்டு.

என் கஷ்டம் என்னோட ..உனக்கு இதில் என்ன ஆயிற்று? ?என்றுகேள்வி கேட்பவர்கள் சற்றே சிந்தித்தால் விடை விளங்கும்.

செயல்புரிவதை மட்டுமே சிந்திக்காமல் அதன் விளைவு பற்றியும் யோசித்து செயல்பட்டால் அனைவருக்கு ம் நலம் உண்டாகும்.

அன்புடன் ஜே.கே

மனவளக்கலை - வேதாத்திரிய சிந்தனை. அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்


Sunday, 19 August 2018

தினம் ஒரு மாற்றம் (19/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

தினம் ஒரு மாற்றம் (19/08/2018)
குறள் 783:

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

விளக்கம் 1:

பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

விளக்கம் 2:

படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.

English Couplet 783:

Learned scroll the more you ponder, Sweeter grows the mental food;
So the heart by use grows fonder, Bound in friendship with the good.

Couplet Explanation:

Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.

நல்வாய்ப்பு என்பது ஒரு சிலர் தானாகவே தேடிக் கொள்வார்கள். ஒரு சிலருக்கு ஒரு தூண்டுதல் தேவைப் படுகிறது.

அப்படியே தூண்டி இதை செய் என்றாலும் தேடி வரும் வாய்ப்பைக் கூட சிலர் நழுவ விட்டுவிடுவார்கள்.

நல்ல நட்பு என்பது ஒருவரின் மீதுள்ள அக்கறை மட்டுமல்ல. அந்த நட்புக்கு ஒரு துன்பம் அல்லது ஏதோ ஒரு சங்கடம் என்றால் அந்த நேரத்தில் உறுதுணையாக இருப்பது. பக்கபலமாக இருப்பது. அது வெறும் பேச்சாக இருக்கக் கூடாது.. செயலில் இருக்க வேண்டும்.

அன்பு என்பது அக்கறையுடன் கூடிய செயலில் இருக்க வேண்டும்.

நட்புக்கு நட்பு செய் என்பார்கள். நட்பை தேர்ந்தெடுக்கும் போது ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்.
அதே சமயம் நட்புடன் பழக ஆரம்பித்தப் பிறகு அதை எக்காரணம் கொண்டும் அந்த நட்பை நழுவ விடக் கூடாது.

எதுவந்த போதும் துணிந்து தோள்கொடுப்பது நல்லது.

நட்பிடம் நல்ல சிந்தனைகளை விதைக்க வேண்டும். நட்பு என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர அதை ஒரு போதும் தவறான பயன்படுத்தலுக்கு இடம் தரலாகாது.

சுயசிந்தனையின் விளைவை ஆராய்ந்து  மேற்கொண்டால் தன்னுடைய சிந்தனையின் மீது மதிப்பு வளரும்.

எப்பொழுதும் இறைவன் ஒருவரை வழிநடத்தி செல்வார் என்கிற நம்பிக்கையும், தன்மீது நம்பிக்கையும் இருப்பது வழித்தடம் சரியாக அமைய நல்வாய்ப்பாய் அமையும்.

அன்புடன் ஜெ.கே

Saturday, 18 August 2018

தினம் ஒரு மாற்றம் (18/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (18/08/2018)
குறள் 333:

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

விளக்கம் 1:

செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

விளக்கம் 2:

நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.

English Couplet 333:

Unenduring is all wealth; if you wealth enjoy,
Enduring works in working wealth straightway employ.

Couplet Explanation:

Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.

பிரபஞ்சம் மற்றும் மனிதனின் மனம் இரண்டுமே அறிவு தான். அது பேரறிவு , இது சிற்றறிவு. அனைத்துமே அனைத்திலுமே காந்த அலைகள் வந்து கொண்டே இருக்கும்.

எந்த எண்ணத்திற்கு மனிதர்கள் அதிக அழுத்தம் கொடுக்கிறார்களோ அதற்குத் தான் முக்கியத்துவத்தை கொடுக்கிறார்கள் மனிதர்கள். அது செயலாகிறது.

மனிதர்கள் தங்களுடைய. தேவையற்ற பயத்தை, நினைப்பை மாற்றிக் கொண்டால் போதும்.

மனசாட்சிக்கு விரோதமாக செய்யும் செயலுக்குத் தக்க விளைவு உண்டு. ஏனென்றால் அப்பொழுதே உடலுக்குள்ளே மனதிற்குள்ளே அதற்குண்டான ரசாயனமாற்றம் ஏற்பட்டு இருப்புக் கட்டிவிடும். தக்க நேரம் வரும் போது செயலாகிவிடும். உடனேவும் வரலாம். அல்லது எந் நேரத்திற்கு வருமோ அந்த நேரத்திற்கு அது தலை தூக்கும்.

தொலைக்காட்சியிலும் சோதிடத்திலும் கூறுவது உண்மையாகவே இருக்கட்டும். நடந்து கொண்டிருப்பதும் உண்மையாகவே இருந்தாலும் அதை பார்த்து மக்கள் என்ன எண்ணுகிறார்கள்??
அவர்கள் அந்த எண்ணத்திற்கு திணிவை, அழுத்தத்தைக் கூட்டுகிறார்கள். அதையே மீண்டும் மீண்டும் சிந்திக்கும் போது அந்த அழிவிற்கு அழுத்தம் கூட்டுகிறார்கள் மக்கள். அது செயலாகிக் கொண்டே இருக்கிறது.

இயற்கை செயலுக்கான விளைவைத் தருகின்றது. துல்லியமாக. ஆனால் விதியை மதியால் வெல்லலாம்.

ஒவ்வொரு மனிதரும் இயற்கையை மதித்து பிறர் நலன் கருதியும் பிறரை மதித்தும்  வாழும் போது மட்டுமே இயற்கை சாதகமாகும்.

உண்மையில் ஒருவர் நினைக்கும் எண்ணம் தான் அங்கே செயலாகிறது.

அந்த காலத்தில் நல்லதையே எண்ணுங்கள் என்று கூறியதும் அதற்காகத்தான்.

ஆனால் பணம் என்ற மாய வலைக்குள் தன்னை பின்னிக் கொண்டு அது இழுத்த இழுப்புக் கெல்லாம் தன்னையே தூண்டிவிட்டுக் கொண்டு தவறுகளை செய்து அதற்கான விளைவுகளையும் தானே அனுபவிக்கிறார் ஒருவர்.

மக்கள் நலன், பாதுகாப்பு, ஒற்றுமை , ஒழுக்கம் சார்ந்த நற்பண்புகள் இவை ஓங்க வேண்டும்.

அளவுக்கு மிஞ்சிய எதுவும் உடலிலும் தங்காது, வெளியிலும் தங்காது. அடித்துத் தள்ளப் பட்டு விடும். உடல்கழிவுகளாகவும், மனக்கழிவுக்களாகவும், இயற்கை பேரழிவாகவும்... சுயமாக சிந்திக்க....

இதுவே இயற்கை நியதி.

அளவோடு அனைத்திலும் இருந்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும்.

வாழும் காலத்தில் கிடைக்கும் வருமானத்தில் எத்தனை பேர் பிறர் நலனுக்காக செலவு செய்கின்றனர்?

சுயமாய் சிந்தித்தேத் தெளிவாய் என்று அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதன்படி ஒருவர் தன்னையே ஆய்ந்து தெளிக.

அன்புடன் ஜெ.கே

Friday, 17 August 2018

இறைநிலையோடு எண்ணத்தைக் கலக்கவிட்டு - வேதாத்திரிய பாடல்


தினம் ஒரு மாற்றம். (17/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

தினம் ஒரு மாற்றம் (17/08/2018)

குறள் 1021:.

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் 
பெருமையின் பீடுடையது இல்.

Tamil meaning
உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது. 

English meaning
There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).

பெண்களை மதித்துப் போற்றும் உலகில் அனைத்து வளங்களும் நிலைக்கும்.

எதையுமே மதித்து தனது கடமையுடன் வாழக் கற்றால் வாழ்க்கை சிறக்கும்.

மனதை கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் மனம் திசை திரும்புவதை தவிர்க்கலாம். ஆனால் சராசரி மனிதனுக்கு இது சாத்தியமா என்பது ஒருவரின் வைராக்கியத்தை பொறுத்தது.

சில அவசியமற்ற பேச்சுக்கள், செயல்கள், சங்கடங்கள், மனதில் நிராகரிக்கக் கற்க வேண்டும்.  அல்லது மனதில் இடம் கொடுக்கக் கூடாது அல்லது மனதில் அளவுமுறை வேண்டும்.

நல்லதை பார்க்கவும், பேசவும், கேட்கவும் மட்டுமே புலன்களை பழக்கினால் மனம் அதற்கு மட்டுமே கட்டுப்பட்டு இயங்கும்.

அனைத்திற்குமே பயிற்சி தான் தேவை. அந்தப் பயிற்சிகள் தான் மனவளக்கலை பயிற்சிகளில் கற்றுத்தரப் படுகின்றன.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலக மக்கள் நலனுக்காக பல அரிய விஷயங்களை எளிமையாக பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைபடுத்திக் கூறியிருக்கிறார்கள்.

உலகில் இயற்கையை ஒட்டியே மனிதன் வாழும் போது இயற்கை மனிதனுக்கு ஒத்தும் உதவியுமாக இருக்கிறது, அனைத்து வகையிலும்.

எப்பொழுதெல்லாம் அதை ஒருவர் மீறுகிறாரோ அப்பொழுது தான் செயல்விளைவை அனுபவிக்க நேர்கிறது.

இயற்கை சட்டம் மதித்து வாழ அனைவருமே இன்புற்று வாழலாம்.

அன்புடன் ஜெ.கே

தினம் ஒரு மாற்ற்ம்(16/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (16/08/2018)

*"யார் பெறுவார் யார் தருவார் அறிவு ஓங்கி அதுவேதான் மெய்ப்பொருளென்றறியும் பேற்றை சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப் பற்றை செதுக்கிக் கொண்டேயிருக்கும் விழிப்பு வேண்டும்."*

*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.*

எதையும் அளவோடு பற்றுதல் மட்டுமே அனைவருக்குமே நல்லது.

நமது வேதாத்திரி மகரிஷி அவர்கள் *சுயமாய் சிந்தித்தே தெளிவாய்* என்று கூறியுள்ளார்கள்.

யோக வழிகளை பலர் பல குருமார்களை பின்பற்றி வருகிறார்கள்.

எந்த ஒன்றும் ஒருவரது அறிவுக்குப் பொருத்தமாக உள்ளதோ அதை பின்பற்றுவதில் தவறில்லை. எங்கே இயற்கைக்குக் முரணாக சில செயல்கள் ஆங்காங்கே தோன்றுகிறதோ அங்கே எல்லாம் அதைத் தடுத்து வழி நடத்த சில மகான்கள் மனித ரூபத்தில்  வருவார்கள்.

ஒருவரின் எண்ணத்தின் தேடுதல் போலவே குரு அமைவார்கள்.

*அந்த விதத்தில் நமக்குக் கிடைத்த அற்புதமான குரு அவர்கள் தான் நமது அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.*

மனவளக்கலையை நாம் அனைவரும் பின்பற்றுவதற்குக் காரணம்? நமது ஆசானின் எளிமை, உண்மை, நேர்மை, முழுமை. அவர்கள் அளித்த பயிற்சிகள் யாவும் ஒருவரின் உடல், உயிர், மனம் சார்ந்த நலன்களை குறிப்பதாகும். அதன் வளத்தை மேம்படுத்துவதாகும்.

அவர்கள் கற்றுக் கொடுத்த பயிற்சிமுறைகள் பிறவிப்பிணி தீர வழிவகுப்பதாகும்.

தன்னை ஒருவர் முன்னேற்றப்பாதையில் தன்னிலையை உணர்ந்து நடக்க மனவளக்கலை துணைபுரிகிறது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

*ஒரு தனி மனிதனின் நற்பண்பு, ஒழுக்கம் தான் இன்றைய காலகட்டத்திற்குத் தேவை.* அதை இக்காலத்தில் மனவளக்கலைப் பயிற்சிகள் அளிக்கிறது மெய்ஞானம், விஞ்ஞானம் கலந்து  அவரவர் உடல்நிலைக்கேற்றபடி அவர்களுக்கு எளியமுறை பயிற்சியாக அளிக்கப் படுகிறது.

யோகம் என்பது ஒருவருக்குக் கிடைப்பது மிகவும் புண்ணியம். அந்த புண்ணியம் இருந்தால் மட்டுமே ஒருவரின் தரம் மேம்படும்.

அந்த தரம் என்பது மனவளக்கலைக்கு முழுமையாக உள்ளது.

அன்புடன் ஜெ.கே

தினம் ஒரு மாற்றம். (15/08/2018)

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்* (15/08/2018)

72வது சுதந்திர நாள் இன்று.

*உலக நல நாட்டம்*

*"ஓர் உலக ஆட்சி உயர் ஒழுக்கத்தோடு உலகினிலே குழந்தைகளை வளர்க்கும் திட்டம் பார் முழுதும் பொருள் துறையில் சமநேர் நீதி பலநாடும் ஒன்றிணைந்த பொருளாதாரம் சீர்திருத்தச் சிக்கனமாம் சிறந்த வாழ்வு தெய்வநிலை அகத்துணரும் இறைவணக்கம் நேர்வழியில் விஞ்ஞானம் பயனாய்க் கொள்ளும் நெறி முறைகள் இவையிணைந்த வாழ்வு காண்போம்."*

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

சுதந்திரம் அனைவரும் முழுமையாக பயன்படுத்துகிறோமா?
ஒற்றுமை, அஹிம்சை இதையே ஆயுதமாக நம் நாட்டு விடுதலைக்கு பயன்படுத்தினார்கள் அந்நாள்.

இந்நாளில் சுதந்திரம் கையாளும் விதம் ஒருவரை பல செயல்களில்  சுதந்திரத்தை அளவுமுறை மீறி பயன்படுத்தி ஏதாவது ஒன்றில் தன்னைத் தானே மூழ்கடித்துக் கொள்கிறார்கள்.

(உ.ம் ) அலைபேசி, மடிக்கணினி, கணினி, இணையதளம், விளம்பரம்,  தொடர் சீரியல், தர்க்கம் செய்வது....

எது ஒன்றிலும் தீவிரம் காட்டுவதும், ஒருவரைத் தூண்டச் செய்யும் விஷயமும்.. அளவுமுறையோடு இருப்பது மட்டும் தான் நன்மையைத் தரும்.

அளவுமுறையுடன், அனைத்தையும் மதித்து, ஒழுங்குமுறையோடு பயன்படுத்தினால்  இயற்கை ஒருவருக்கு சாதகமாகத் துணை நிற்கும்.

சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்தி நல்வழியில் நடந்து இவ்வுலகத்தை மேம்படுத்தும் செயலில் ஈடுபடுவது உலக மக்கள் ஒற்றுமைக்கு வழி வகுக்கும்.

மேற்கூறிய மகரிஷி அவர்களின் பாடலின் பொருளுணர்ந்து செயல்பட அனைவருக்குள்ளும் பொதுநலம் ஊடுருவும்.

அன்பும் அறனும் ஒற்றுமையும் ஓங்கும்.

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

அன்புடன் ஜெ.கே

மனைவி நல வேட்பு நடத்தும் முறை

மனைவி நல வேட்பு நடத்தும் முறை

அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு அருளியபடி ஆண்டுதோறும் மனைவி நல வேட்பு நாள் விழா ஆகஸ்ட் 30- ல் மன்றங்களில் சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தி வருகிறோம். அனைத்து மன்றங்களிலும் ஆசிரியர்கள் ஒரே மாதிரி நடத்துவதற்காக இந்த வழிகாட்டி குறிப்புகள் அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நடத்தும் முறை

மெய்ப்பொருள் வணக்கம்   : 05 நிமிடம்

2. தவம் - துரியம் : 10 நிமிடம்

3. வரவேற்புரை ( சிறப்பு விருந்தினரை கௌரவித்தல் ) : 10 நிமிடம்

4. அறிமுக உரை
( மனைவி நல வேட்பு விழா நோக்கம் - அருட்காப்பு விளக்கம், காந்த பரிமாற்ற தவவிளக்கம். : 20 நிமிடம்)

5. அருட்காப்பு

1. மனைவி - கணவனுக்கு
 2. கணவன் - மனைவிக்கு ( அருட்காப்பு சொல்லிக்கொண்டே) - 02 நிமிடம்

6. காந்த பரிமாற்ற தவம் ( Trans Current Meditation) : 15 நிமிடம்

 1) காந்தத்தை செயல்முறையில் உணரச் செய்தல் - பாவனை முறை

 2) தம்பதியர் இருவரும் எதிரெதிர் திசையில் அமர்ந்து ஒருவரது வலது உள்ளங்கையோடு  மற்றவரது இடது உள்ளங்கை வந்து சேருமாறு வைத்துக் கொண்டு தவம் இயற்ற வேண்டும்.

3) கண்களை நோக்குதல் - வாழ்த்துதல் 01 நிமிடம்

7) கணவன் மனைவிக்கு மலர் கொடுத்தல்
“ மென்மையான இந்த மலர் போன்ற மனம் கொண்ட நீங்கள் மனைவியாக வந்ததற்கு நான் பாக்கியம் செய்தவன். உன்னை என் வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாப்பேன்” என மலர் கொடுத்தல்.

8) மனைவி கணவருக்கு கனி கொடுத்தல்

“ இக்கனி போன்ற கனிவான மனம் படைத்த நீங்கள் எவ்வாறு கனியில் உள்ள வித்து முளைத்து மீண்டும் வளர்ந்து பூவாகி, காயாகி, கனியாவது போல் இக்குடும்பத்தில் என்னை ஏற்று மலரச்செய்து கனி போன்ற சுவை நிறைந்த வாழ்க்கை அளித்ததற்கு நன்றி கூறி இக்கனியை அளிக்கிறேன்.

9) கணவர் “பெற்றோரை பிறந்தகத்தை...." கவி சொல்லி வாழ்த்துதல் 05 நிமிடம்.

10) மீண்டும் கண்களை மூடி தம்பதியர்கள் உருவை நினைத்து வாழ்த்துதல் : 01 நிமிடம்

11) சிறப்பு தம்பதியினர் வாழ்த்துரை : 10 நிமிடம்

12) சிறப்பு அழைப்பாளர் சொற்பொழிவு : 40 நிமிடம்

13) நன்றியுரை

14) உலக நல வாழ்த்து

            **************

மனைவி நல வேட்பு வேதாத்திரி மகரிஷி அவர்கள்

மனைவி நல வேட்பு

வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை

“பெண் வயிற்றில் உருவாகிப்
பெண் பாலுண்டே வளர்ந்தாய்
பெண் துணையால் வாழ்கின்றாய்
பெண்ணின் பெருமை உணர்.
- அருட்தந்தை

வாழ்க்கையானது ஆண், பெண் என்ற இருவரும் இணைந்து தான் நடைபெறுகின்றது.

ஒரு குழந்தை அறிவுடையவனாக, திறமையுடையவனாக, நல்ல மகனாக/மகளாக  வரவேண்டுமென்றால், ஆணும் பெண்ணும், தாயும் தந்தையும் சரிநிகர் சமானமாக சுதந்திரத்தோடு, அறிவு சுதந்திரத்தோடு இருத்தல் வேண்டும்.

நம் நாட்டின் பண்பாட்டின்படி பெண்கள் இயற்கையிலேயே தியாகிகள் ஆவார்கள். ஏனெனில், கணவன் வீட்டிற்கு வரும்போதே தன் பெற்றோர், பிறந்த வீட்டு சூழ்நிலை அனைத்தையும் துறந்துவிட்டு தான் வருகிறாள்.

திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பே துறந்து வரக்கூடிய இயல்பு அவர்களுக்கு வந்துவிடுகிறது. அந்த அளவுக்கு துறந்த பிறகு, புகுந்த இடத்தில் அன்பு நாடி வந்த பெண்ணிற்கு ஆதரவு தர வேண்டியது அவசியம். மனைவி என்னும் மதிப்பில் மட்டுமல்லாது, பெண்மை என்ற மதிப்பிலே எல்லோருக்கும் தரக்கூடிய மதிப்பை வந்த பெண்ணிற்கு தர வேண்டும்.

கணவன், மனைவி உறவிலே இருக்கக்கூடிய இந்தப் பண்பாடு, தியாகம் இதை சரியாக உணர்ந்து நடப்போமேயானால் அதைவிட பெரிய இன்பம் இந்த உலகில் இருக்க முடியாது. அதை நல்ல முறையில் காப்பாற்றிக் கொள்வதற்கு வாழ்த்தி, வாழ்த்தி அந்த வாழ்த்திலே வளம் காணலாம்.

பொருள்கள் மேல் ஆசை படுவது போல், மறுபால் இனத்திடம் ஆசைப்படுவது பால் கவர்ச்சியாகும். இது கற்பொழுக்க கேட்டைச் சேர்ந்தது. கற்பு நெறி என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானதாகும். ஆயினும், சமுதாயத்தின் இயற்கையாய் அமைந்த உடலமைப்பின் காரணமாக பெண்களுக்கே பாதிப்பு அதிகமாக கூறப்படுகிறது.

" அன்பு ஊற்றாம் இல்லறத்தில் ஆண்பெண் இருபேரும்
 அவரவர்கள் துணைவர்களை மனம் வருந்தச் செய்தால்
துன்ப உணர்வலை எழும்பி தாக்கியோரைத் தாக்கும்.
தொல்லை தரும் சாபமாம் நோய்கள் வரும் தேர்வீர்.
இன்ப ஊற்று இருவரிடைப் பெருக வாழ்த்தலோடு
இன்முகமும் பொறுமை, தியாகம், தகைமை காட்ட வேண்டும்.
தன் புகழ் விளங்கும் நல்ல தரமுடைய மக்கள்
தழைப்பார்கள் இல்வாழ்வை ஆய்ந்து கண்ட உண்மை.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி.

பெண்களுடைய முன்னேற்றம்தான் குழந்தைகளினுடைய முன்னேற்றம்.

பெண்களுடைய முன்னேற்றம்தான் குடும்பத்தினுடைய முன்னேற்றம்.

பெண்களுடைய முன்னேற்றம்தான் நாட்டினுடைய முன்னேற்றம்.

“உலகம் முழுவதும் நான் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தேன். எல்லா நாடுகளிலும் தந்தை நாள் (fathers day), அன்னை நாள் (Mother's Day), கணவன் நாள் (Husband's Day), குழந்தைகள் நாள் ( Children's Day) எல்லாம் உள்ளன. ஆனால் மனைவி நாள் என்று இல்லை. அந்தக் குறையைப் போக்கவும், எல்லாம் வல்ல திருவுருவாம் பெண்ணினத்தைப் போற்றும் வகையில் அன்னை லோகாம்பாள் பிறந்த தினமான ஆகஸ்ட் 30 ஆம் நாள் " மனைவி நல வேட்பு நாளாக கொண்டாடி மன நிறைவு பெறுவோம்."
- அருட்தந்தை

" பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறு என்ன பெருமை
இதைவிட எடுத்து பேசுதற்கு”

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
மாக்கோலம

Wednesday, 15 August 2018

தினம் ஒரு மாற்றம் (14/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (14/08/2018)

*குரு வணக்கம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*“புருவத்திடை உந்தன் பூவிரலால் தொட்டு எந்தன்* *உயிருணர்த்திபுன் செயல்கள் பதிவழிந்து*
*பூர்வநிலை* *அறிவறியத்* *துரியம் காட்டி கருவறிந்து* *அகத்தவத்தால்*
*களங்கங்கள்* *போக* *பெருங்களத்தமர்த்தி*
*கருத்துடனே* *விளைவறிந்து*
*ஐந்து* *புலனையாளும்* *கலை* *போதித்து*
*உருவத்தில்* *உயிரை* *உயிர்க்குள்*
*உள்ள* *மெய்ப்பொருளை* *அறிவாய்க்காட்டி*
*ஒழுக்கத்தால்* *உலகினையே*
*நட்புக் கொள்ளும்* *அன்புநெறி விளங்கவைத்து*
*திருத்தமொடு காயகற்பம்*
*சீர் கர்ம யோகம் உடற்பயிற்சி தந்து*
*சிந்தனையை உடல் நலத்தை*
*சீரமைத்து உய்வித்த குருவே வாழ்க!”*

*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*நமது ஆசான் அருட்தந்தை அவர்களின் 108 வது ஜெயந்தி இன்று.*

இன்றைய நாளில் அவர்கள் நமக்கு அளித்த வாழ்க்கை நெறிகளை ஒவ்வொருவரும் கடைபிடித்து வருகிறோமா? என்பது அவரவருக்கேத் தெரியும்.

சொற்களில் இனிமையும், செயலில் அன்பும், பிறருக்கு உதவும் எண்ணமும், பண்பும், ஒருவர் நேர்மறையாக சிந்திக்கும் திறனும் பெற்றிருந்தால் ஒருவரின் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கியே பயணிக்கும்.

ஆசானின் கரங்களை பற்றிக் கொள்வதன் மூலம் அவரே நம் அனைவரையும் வழிநடத்திச் செல்வார்கள்.

நம்பிக்கையும், குருவின் மீதுள்ள மதிப்பும் ஒருவரை,  தன்னை மேம்படுத்த உதவும்.

அவர்கள் மீதுள்ள மதிப்பு, நம்மை,  அவரின் உலக அமைதிக்கான கனவு நனவாகும் பாதையின் அருகே கொண்டு போய் விடும்.

கனவு நனவாக ஒவ்வொரு மனவளக்கலைஞரின் ஒருமித்த எண்ணம் மற்றும் மனவளக்கலைஞரிடையே  ஒற்றுமையும், நல்லிணக்கமும், தேவை.

ஒவ்வொரு மனவளக்கலைஞரின் மகரிஷியின் காந்தத் தத்துவப்  புரிதல், உலக சமாதானத்தை நமதருகேக் கொண்டு வரும்.

நம்மருகேயே அனைத்தும் உள்ளது.

ஒற்றுமையும் புரிதலும் மட்டுமே அவசியம்.

நம்மிடையே ஒற்றுமை, உலக ஒற்றுமைக்கு சுலபமாக வழி வகுக்கும்.

அன்புடன் ஜெ.கே

தினம் ஒரு மாற்றம் (13/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (13/08/2018)

"மனமது இயற்கையின் மாபெரும் நிதியலோ மனதைத் தாழ்த்திட மயக்கத்தால் துன்பமே மனதை உயர்த்திட மட்டிலா இன்பமே மனதிலே உளஎலாம் மற்றெங்கே தேடுவீர்."

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
(ம.வ.க பாகம் 2, பக்.88)

உண்ணும் உணவுக்குத் தக்க உடல் உழைத்து வாழும் போது மட்டுமே நல்ல உறக்கம் வரும்.

மனதை கற்பனை குதிரையில் மனத்திற்குப் பொருந்தாத எண்ணங்களை ஓட விட்டால் உறக்கம் வராது.

மனதில் எண்ணங்களை குறைத்துக் கொண்டே வந்தால் இறைவனின் குரலை கேட்கலாம்.

அந்த அனுபவத்தை மௌனத்தில் மட்டுமே உணர முடியும்.

மௌனம் அமைதி நிலையாக இருக்கும் போது கவனம் சீர்படும்.

மனஅலைச்சுழல் குறைத்துக் கொண்டே வந்தால் மனம் அலைநிலையிலிருந்து நிலையாகி விடும்.

மனம் முரண்படாமல் நிலைக்க வைக்கத் தான் தக்க பயிற்சி தேவை. அளவுமுறை தேவை. விழிப்புணர்வு தேவை.

ஒவ்வொரு முறையும் கடவுள் வழிகாட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள். அது தான் அறிவுறுத்தல். அதன்படி செயல்பட்டால் மனம் ஒருவருக்கு வசமாகும்.

மனத்தின் மொழி தான் மௌனம். அது ஒருவர் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தால் ஒருவரது சீவகாந்தம் செலவாவது மட்டும் இல்லாமல் புலன்களை இயக்குவதிலேயே மனமும் இயங்கும். புலன்கள் அங்கு ஓங்கும். அறிவுக்கு அங்கே இடம் கொடுக்காது.

புலன்களை ஒருமுகப்படுத்தவும், இறையுணர்வு பெறவும் தான் தவம்.

தொடர் பயிற்சி மனதை மௌனமாக்கும். புலன் இயக்கம் ஒழுங்குக்கு வரும். கட்டுக்குள் அடங்கும். அருட்பேராற்றலின் அன்புக்குரல் இனிமையாக நம்மை வழிநடத்தும்.

அன்புடன் ஜெ.கே