உலக சமாதானம்
முதற் பாகம்
பாடல் - 2. பொருத்தமில்லா யூகம்
பூசை மதம் மொழியொடுடை, ஒன்றாய்க் கொண்டால்
பொருந்தும் சமரச மென்பார்; அதிலும் இல்லை;
காசை ஒழித்தே உலகில் பண்டம் மாற்றி
காணலாம் நன்மை என்பார்; காலம் ஒவ்வா.
ஆசைதனை ஒழிக்கவென்று பலர் சொன்னார்கள்,
அது எழுந்து விட்டாபின்னே அழிப்பதெங்கே ?
ஓசை முதல் ஐயுணர்வை ஒன்று சேர்த்து
உள்ளுணர்தல் அமைதி என்பார்; உணர்ந்தோர் மட்டே.
மன ஓர்மைக்கு உரிய வழிபாடுகளில் பேதப்பட்டு இருக்கும் வணக்கத் தியானமுறைகள், இவைகளைப் போதிக்கும் மதங்கள், பேசும் மொழி, நாம் ஆடைகளை உடுக்கும் முறைகள் என்ற இவைகள் எல்லாம் ஒரே மாதிரியாக அமைந்தால், சமரசம் ஏற்படும் என்று சிலர் சொல்லுகிறார்கள். இவ்வாறு அமைந்தாலும் குறிப்பிட்ட பலன் கிடைக்காது. உதாரணமாக, ஒரே மதத்தைத் தழுவியர்களிடமும், இரு சகோதரர்களிடமும், இவைகள் ஒன்றாக இருந்தும், அவர்களிடையேயும் பலவிதமான பிணக்குகளைக் காண்கிறோம். பணத்தை எடுத்துவிட்டுப் பண்ட மாற்று வைத்துக் கொண்டால், வாழ்வில் அமைதி காணலாம் என்கிறார்கள் சிலர். பொருள்களின் பரவல் வேகம் அதிகரித்தும், உலகில் பல பகுதிகளிலும் மனிதர்கள் தனித்தோ, பலராகக் கூடியோ செய்யும் எண்ணற்ற பொருள்கள் ஒவ்வொருவர் வாழ்விற்கும் தேவையாகவும் உள்ள இக்காலத்தில், பண்டமாற்று முறையை அமுலில் வைத்துக் கொள்ள முடியவே முடியாது. அப்பண்ட மாற்று முறை ஏற்பட்டாலும், அமைதி ஏற்பட்டுவிடாது. மனிதர்கள் தம் ஆசையைக் குறைத்துக் கொண்டால் அல்லது அறுத்துவிட்டால், வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் போய்விடும் என்று சொல்லப்படுகிறது. ஆசையை ஓழிக்கவே முடியாது.
இச்சை என்பது இயற்கை எழுச்சியே
இச்சிப்பதே ருசு இயங்கும் உடலுக்கு
இச்சித்து அனுபவித்து இச்சை ஒழுங்குறும்
இச்சை ஓழித்திட ஏன் முயல்கின்றீரோ ?
இச்சை எழுந்திடக் காரணம் கண்டிடு
இச்சை முடித்திடச் சூழ்நிலை பார்த்திடு
இச்சை முடித்திட்டால் பின்விளை வெண்ணிடு
இச்சை பிறந்ததைப் போல மறைந்திடும்.
என்றபடி இச்சையே உயிர் வாழ்வதற்கு அடிப்படையாக இருக்கிறது. இச்சையின் தத்துவம் அறிந்து அதற்கு ஒத்த சூழ்நிலைகளையும், அதை ஒழுங்காகப் பயன்படுத்தும் முறைகளையும் வகுக்க முயல வேண்டுமே அல்லாது, இச்சையை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுதல் கூடாது. இச்சையை ஒழிக்கவும் முடியாது. உருவம் (அழுத்தம்) ஒலி , ஒளி , சுவை, மணம் , ஆகிய ஐந்தையும் அறியும் அறிவின் புலன்வழி செயலாற்றாலை விடுத்து, அறிவால் அறிவை அறியும் உள்நாட்டப் பயிற்சியால், ஆன்ம நிலை அறிந்தால், அமைதி காணலாம் என்று சொல்லுகிறார்கள். அது உண்மையே எனினும், அறிந்ததோர் மட்டுமே அமைதிபெறலாம். இன்றைய நிலையில் எங்கோ ஒருவருக்கின்றி அனைவருக்கும் இம்முறை பயன்படாது. தினசரி வாழ்க்கையும், வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களும், பலதரப்பட்ட அறிவு நிலை உடையவர்களின் கூட்டுறவில் அமைந்ததிருப்பதால், வருவாரோ, சிலரோ, ஆன்மீக அறிவு பெறுவது மட்டும், உலக அமைதிக்குப் போதுமானதாகாது .
https://youtu.be/837z1e6cVZw
உலக சமாதானப் பாடல் - 3 தொடரும் .........
No comments:
Post a Comment