Friday, 17 January 2020

உலக சமாதான கவிகள்

*உலக சமாதானம்*
*முதற் பாகம்*
*பாடல் : 1 - ஆராய்ச்சி* 

உலக சமாதானத்தை நாடி எங்கும் 
   உண்மை ஆர்வத்துடனே  பெரும்பாலோர்கள் ,
பல விதமாய்ச் சிந்தித்து வருகின்றார்கள். 
   பயனுள்ள முடிவு இதுவரையில் காணோம் 
கலகத்தின் காரணமோ கண்ட மட்டும்,
   கணக் கெடுக்க முடியவில்லை. அவை களைந்து 
நலம் விளக்கும் வழிமுறைகள நன்னோக்காத்தால்
   நாம் வகுத்தது இது வரைக்கும் எண்ணிறந்த. 

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி 

மனித இனம் பல வகைகளிலும் படுகின்ற துன்பங்களைக் கண்டு, அவைகளைப் போக்க வழி காண வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள், எல்லோருடைய நினைவிலும் வலுப்பெற்றே வருகிறது. அத்துடன், உலக மக்கள் யாவரும் ஒன்று பட்டுச் சமாதான வாழ்வையடைய வேண்டியதே இறுதி லட்சியம் என்ற எண்ணமும் அதற்கேற்ற திட்டமும் தேவையே என்ற எண்ணமும் ஏற்பட ஏற்பட, அத்தகைய இறுதி இலட்சியமும், திட்டமும் அவசியம் என்ற பேரு விருப்பம் பெரும்பாலோர் நெஞ்சில் பூரணமாய் எழுவதாயிற்று. 

உயர் நோக்கமும் பொறுப்புணர்ச்சியும் உள்ள  பெருந்தலைவர்களும் அறிஞர்களும் உலகம் சமாதானம் அடைய வேண்டும் – உலகத்தில் சமாதானம் ஏற்பட வேண்டும் – என்று தம் உள்ளத்தில் உண்மை ஆர்வத்துடனே பலகாலமாகவே சிந்தனை செய்தே வருகிறார்கள். எனினும் இதுவரையில் பலன் தரத்தக்க முடிவு அல்லது திட்டங்கள் ஏற்படவில்லை. நாம் உணர்ந்த மட்டும், உலகில் மனிதரிடையே உள்ள பலவிதமான சச்சரவுகளுக்கும் அடிப்படையான காரணங்களை எண்ணியோ, அளவிட்டோ கூறவும் முடியவில்லை. இத்தகைய சங்கடங்கள் அனைத்தையும் போக்கி, உலக சமாதானம் என்ற பெரும் நன்மையை விளைவிக்க, எண்ணற்ற அறிஞர்கள் அவர்களின் நன்னோக்க சிந்தனையால் நுணுகி ஆராய்ந்து,  இது வரையில் கண்ட வழி முறைகளும் பலப்பல.

உலக சமாதான பாடல் 2 தொடரும் ..

No comments: