Friday, 6 March 2020

உலக சமாதான பாடல் :15 - 'உலக அறிவாளிகளே ஒன்று சேருங்கள்'

https://www.facebook.com/100025456231980/posts/594259958099207/

*உலக சமாதானம்*
*முதற் பாகம்*                *பாடல் : 15   –  உலக அறிவாளிகளே  ஒன்று சேருங்கள்*

    ஆராய்ச்சியுடையோர்கள், அறிஞர்கள், நல்
      அரசியலார், மதத்தலைவர், அனைவோர் கேளீர்!
    போராட்சிமுறை ஒன்றால் இது வரைக்கும்
      பூவுலகில் மனிதர்கண்ட துன்பம் ஆய்வீர்!
    வீராப்புப்பேசி சில வீணர் இப்போ
       விஞ்ஞான முறையில் அழிவைக் கண்டுள்ளார்!
    “ஓராட்சி” உலகிணைந்து வகுத்தாலன்றி ,
      உலக சமாதானமில்லை. விளைவு என்னாம் ?

    ஆராய்ச்சியுடையோரே, அறிவாளிகளே, அரசியல் நிபுணர்களே, கட்சித் தலைவர்களே, மதங்களின் தலைவர்களே, அனைவரும் கவனியுங்கள்.

    தன் நாட்டைப் பாதுகாக்கவும், பிற நாட்டைத் தாக்கவும், ராணுவத்தால் ஆட்சியைப் பலப்படுத்திக் கொண்டு யுத்தம் என்ற பலாத்கார-அநாகரீக நம்பிக்கை முறையைக் கையாளுகிற அரசியல் முறையால் உலகில் எல்லா நாடுகளிலும் மனிதர்கள் இதுவரையில் பட்ட துன்பங்களையும் எண்ணற்ற நாடுகளும், பொருள்களும், மக்களும், உயிரினங்களும் அழிவுற்றதையும் நினைவுக்குக் கொண்டு வந்து ஆழ்ந்து ஆராய்ந்து பாருங்கள். பகை நாடுகள் நம்மைத் தாக்கி விடுமே என்ற பயத்தினாலோ, அறியமையாலோ, தங்களிடம் செலவபலம், ஆயுதபலம், ஆள்பலம், படைபலம் இவைகள் அதிகமாக இருக்கின்றன என்ற தன்முனைப்பினாலோ, அயல் நாடுகளைச் சமயம் வாய்த்தால் தாக்க, எதிர்க்க, விஞ்ஞான முறையிலே அழித்து விட, அணுகுண்டு முதலான பயங்கர விளைவுகளைத் தரும் ஆயுதங்களைத் – கருவிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

    அறிவறிந்த மனித இனத்தின் வாழ்க்கைத் தத்துவமறிந்த அறிவாளிகள், இயற்கைத் தத்துவமறிந்த விஞ்ஞானிகள், பிறப்பு-இறப்பு, உடல் இயக்க ரத்த ஓட்ட வளர்ச்சி-தளர்ச்சி, வியாதி-சுகம் என்ற இவைகளை அறிந்த நிபுணர்களான வைத்தியர்கள், மனித இனக்கூட்டு வாழ்க்கைத் தத்துவமறிந்த அரசியல் தலைவர்கள், மனித இன வாழ்விற்கு அவசியமான பொருள்களின் தேவை அளவு, உற்பத்தி முறை, சேகரம், பங்கீடு என்ற இவைகளைப் பற்றி உணர்ந்திருக்கும் பொருளாதார நிபுணர்கள் அனைவரும் ஆங்காங்கு கூடி ஆலோசனை செய்து, உலகம் பூராவிலும் உள்ள மனிதர்கள் ஒரே ஆட்சியின் கீழ் அச்சமின்றி சுதந்தரமாக வாழும் முறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

    இத்தகைய ஒரு ஆட்சியை ஏற்படுத்துவதில் தவறினாலும், தாமதித்தாலும் உலகில் யுத்தம் வந்தே ஆகி விடும். அப்படித் தோன்றிவிட்டால், இன்றைய நிலையில் எந்த அளவில் கொடுமைகளை உலக மக்கள் அனுபவிக்க நேரிடும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

    மனிதன் என்ற முறையில் உலகில் உள்ள ஒவ்வொருவரும் இதைப் பற்றிச் சிந்தித்தே ஆக வேண்டும்.


*உலக சமாதானப் பாடல் – 16         தொடரும் ....*

No comments: