Tuesday, 17 March 2020

உலக சமாதானம் முதற் பாகம் பாடல் : 18 – மனிதருள் வேறுபாடுகள்

https://m.facebook.com/story.php?story_fbid=601715307353672&id=100025456231980

உலக சமாதானம்
முதற் பாகம்
பாடல் : 18   –  மனிதருள் வேறுபாடுகள்

    கருவமைப்பு, உணவுவகை காலம், தேசம்,
      கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி,
    பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி,
      பழக்கம், வழக்கம், ஒழுக்கம், இவற்றிற்கேற்ப ,
    உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி,
      உடல் வலிவு, சுகம், செல்வம், மனிதர்க்குண்டாம்
    தரும் இவற்றில் மாறுதலால் ஒவ்வொருவருக்கும்,
      தனித்தனியே அவ்வவற்றில் வேறுபாடு.

    உலகில் இன்று ஏறக்குறைய ஐநூறு கோடி மக்கள் இருப்பதாக அறிகிறோம். இவர்கள் ஒருவருக்கொருவர் பலவிதத்தில் அதாவது உருவ அமைப்பில், குணத்தில், அறிவின் உயர்வில், உடல் பலத்தில், சுகாதார நிலையில், செல்வத்தில், கீர்த்தியில் மாறுபாட்டே இருக்கிறார்கள். இதற்குக் காரணம் இங்கு விளக்கப்பட்டிருக்கிறது.
1. தாய், தந்தை விந்துநாத சேர்க்கையின் அமைந்த சிறப்புத் தன்மையான கருவமைப்பு .
2. கர்ப்பத்திலும், பிறந்த பின்னும் உடலில் சேர்ந்த-உடல் உட்கொண்ட-உணவு.
3. ஆதி மனிதன் தோற்றம் முதல் இன்று வரையில் மனித இனத்தின் அறிவின் கூர்மை, செயல் திறமை இவைகளால் அடைந்து வரும் மாறுதல்களைக் குறிக்கும் காலங்களில் ஒருவனுக்கு அமையும் காலம். அதாவது (கற்காலம், இரும்புக் காலம் முதலான காலங்களில் ஒன்று).
4. வாழும் தேசத்தின் சீதோஷ்ண நிலைகள், மக்கள் அறிவுநிலை, பழக்க வழக்கங்கள், விளைபொருள்கள் மாற்றுமுள்ள வாழ்க்கைச் சூழ்நிலைகள்.
5. அறிவையும், உடல் பலத்தையும் உபயோகித்துப் பயன் அடையும்-பயன் பேருக்கும்-கல்வி முறைகளில் அவன் கற்கும்-கற்ற-அளவு.
6. அறிவுத் திறமை, உடல் பலம் என்ற இவற்றைக் கொண்டு செய்து வரும் தொழில்கள்.
7. அரசாங்கச் சட்டதிட்ட ஆட்சி முறை அமைப்புகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும்.
8. அறிவையும், உடற்கருவிகளையும் ஒன்று படுத்தி, வாழ்வில் பலவிதத்திலும் பயனையும் இன்பத்தையும் அளிக்கின்ற அவன் பெற்றிருக்கும் திறமையும் அவைகளை ரசிக்கும் ஆர்வமும்.
9. தான் அடைந்த, அடையவேண்டிய, பலன்களை நினைவில் கொண்டு, அவன் அறிவு உடல் ஆற்றல்களைப் பயன்படுத்தும் வகையில் எடுக்கின்ற முயற்சியின் அளவும் தன்மையும்.
10. பூமி அண்டகோளங்களின் சஞ்சாரம் இவைகளால் மாறிக் கொண்டே இருக்கும் அவன் வயது.
11. பண்புக்கும், வாழ்க்கைத் தொடர்புக்கும் ஏற்ற நட்பு, அந்த நட்பினால் ஏற்படும் விளைவுகள்.
12. பிறந்தது முதல் அன்று வரையில் வாழ்வில் ஏற்பட்ட-குறுக்கிட்ட-வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிட்ட-சந்தர்ப்பங்கள்.
13. அறிவின் உழைப்பான சிந்தனை வேகம், விளைவு, பெருக்கம், ஆகிய ஆராய்ச்சித் திறமை.
14. அறிவுக்கும், உடலுக்கும் ஏற்பட்டிருக்கும் பழக்க, வழக்க ஒழுக்கங்கள். இவைகள் ஒவ்வொன்றின் அமைப்புக்கேற்ப ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப-ஒவ்வொரு மனிதனுக்கும் உருவமைப்பு, குணம், அறிவின் மேன்மை, உடல்நலம், வலிவு, செல்வம், புகழ் இவற்றில் வேறுபாடும், சிறப்புகளும் உண்டாகின்றன.
உலக சமாதானப் பாடல் – 19         தொடரும் ....

No comments: