Saturday, 16 June 2018

தினம் ஒரு மாற்றம் (16/06/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (16/06/2018)

'வினைப்பதிவில் தீயவற்றை வேரறுத்து வாழ்வில் விலங்கினத்தின் செயலொழித்து விழிப்போ டறநெறியில் அனைத்துலக மக்களும்மெய் யறிவுடனே வாழும் அந்தபெரும் நன்னாளை வாழ்த்திவர வேற்போம்.
- பிரம்ம ஞானம் (பக் 120)
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

*ஒவ்வொருவரும் பிறரும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஏன் நினைக்க வேண்டும்??*

*'வாழ்க வளமுடன்' என்று ஏன் வாழ்த்த வேண்டும்?*

சமுதாயத்தில் நடக்கும் சில தவறுகளை சரி செய்வதற்காகவும், பிறர் பூரண நலத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்தால்.., தானும் நலமாக இருப்பார்... தன்னை சுற்றியுள்ளவர்களையும் நலமாக வைக்க முனைவார்.

(உ-ம்) ஒருவர்.... தெரிந்த ஒருவருக்குக் கடன் கொடுக்கிறார் ...கடன் வாங்கிய நபர் குறித்த காலத்தில் பணத்தைத் திருப்பித் தர இயலவில்லை என்றால்... பணம் வாங்கிய நபரை நினைத்து அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்களா?? அல்லது அவரை குறை கூறுவீர்களா???

அவர் நன்றாக இருந்தால் தானே கடனை திருப்பித் தர முனைவார். அதை விட்டுவிட்டு குறை கூறுவதாலோ, அவர் மீது வருத்தத்தை திணித்தாலோ, அந்தப் பணம் திரும்பி வருமா?? சற்றே சுயமாக சிந்திக்க...

நடக்கும் ஒவ்வொரு சமுதாய நிகழ்வுக்கும் யாரையும் குறை கூறுவது முற்றிலும் ஒரு தவறான கருத்தாகும்.

சில சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும், சில நேரம் சாதகமாகவும், சில நேரம் பாதகமாகவும், இருப்பதற்கு அவரவரே காரணம்... என்று உணர்தல் தன்னைத் தான் மாற்றி அமைக்க முனைதல் நலம் விளைவிக்கும்.

ஒரு பொருளை பிறர் அனுமதி இல்லாமல் எடுத்தால் அதற்குப் பெயர் திருட்டு..அது தன்னுடைய வீட்டிலேயே, பெற்றோரிடமோ, உடன் பிறப்புகளிடமோ, அல்லது வேறு யாராக இருந்தாலும் அனுமதி இல்லாமல்  எடுத்தால் அது தவறு தான்.

சிறு வயதில் தெருக்களில் பள்ளிக் கூடம் செல்லும் வழியில் மாங்காய், கொய்யா என்று கல்லை விட்டு எறிந்து பறித்து உண்பது, இவை போன்ற செயல்கள் சிறுவயதிலேயே பிறரிடத்தில் அனுமதி பெற்று ஒன்றை வாங்கிப் பழக வேண்டும் என்று பெற்றோர்கள் சொல்லி வளர்க்க வேண்டும்.

இது திருட்டு என்பது வளரும் போது அவர்களை அறியாமலேயே பெரியவர்களாகும் போதும் தவறு என்று நினைப்பதில்லை.

அது நாளடைவில் சின்ன தவறுகள், பெரிய தவறுகளாக ரகசியமாக தவறுகள் செய்ய தூண்டுகோலாக அமைகின்றன.

இவ்வாறான நிகழ்வுகளை தவிர்க்கவே அனைவரும் மன நலத்தோடும், உடல்நலத்தோடும், பொருளாதார மேம்பாட்டோடும், மனநிறைவோடும், வாழ வேண்டும் என்று எண்ணி வாழ்த்தும் போது.... அந்தத் தவறுகள் குறைக்கப்பட்டு நல்வழியில் செயல்களாற்றுவர்கள்.

தற்காலத்தில் வன்முறைகளை குறைக்கவும், நற்சிந்தனை நல் ஒழுக்கங்களும் ஓங்கவும் பிறர் நலமாக வாழ வேண்டும் என்று *'வாழ்க வளமுடன்'* என்று வாழ்த்து அனைவரது மனதிலும் ஊடுருவி செயலாகும். சமுதாய மாற்றம் இவ்வாறு உருவாகும்.

அன்புடன் ஜெ.கே

Friday, 15 June 2018

தினம் ஒரு மாற்றம் (15/06/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (15/06/2018)

"தன்முனைப்பு, பின் முனைப்பு இரண்டால் ஏற்ற முக்களங்கம் எவையென்றால் மெய்மறந்த தன்முனைப்பு, பழிச்செயல்கள், பொருள் மயக்கம் - தளை மூன்றாம், இவை களைந்து உய்யவென்றால் உன் முனைப்பு குறைத்திட்டு உள்ளுள் நாடும் உயிர்த் தவமும் அறநெறியும் சிறந்த பாதை தன்முனைப்பாய் உயிர்நாட்டம் திரும்பி விட்டால் நாள்தோறும் விடுதலையின் இனிமை காண்பாய்."
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
ம.வ.க 1
( பக். 107)

பற்று என்பதை பற்றிக் கொண்டு இருந்தால் மற்றவை எல்லாம் கண்களுக்குப் புலப்படாது.

*பொருள் பற்று,* என்பது இது என்னுடையது..
என்பதும் நான் அதை ஒருபோதும் பிறர் அனுபவிக்கக் கொடுக்க மாட்டேன்... என்பதும். என்னிடம் மட்டுமே இது இருக்கும் என்பதும். தான் அதை பயன்படுத்தாமல் இருந்தாலும் இருப்பேன். ஆனால் அதை பிறர் அனுபவிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்பதும் பொருட்களின் மேல் உள்ள தீவிரப் பற்றுதலை குறிக்கும். இவ்வாறான தீவிரப்பற்று தீய செயலை செய்யத் தூண்டும்.

*அதிகாரப்பற்று* என்பது நானே பெரியவன் என்கிற அகங்காரத்துடன் வாழ்வது.. மற்றவர்கள் எல்லாம் எம்மாத்திரம் என்று ஏளனமாக நினைப்பது. தனக்குக் கீழ்  மற்றவர்கள் அடிமையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பது.

பிறரின் உணர்வுகளுக்கும், மதிப்பும், மரியாதையும், கொடுக்காமல் வாழ்வது. தான் சொல்வதே சரி.. என்பதும் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று இருமாப்பில் தலைகால் புரியாமல் ஒரு செயலை செய்வது, தான் எடுக்கும் முடிவே சரி என்று எண்ணுவது. பிறரின் எண்ணம், சொல், செயல்களைதட்டிக் கழிப்பதும்...
தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையில், அதிகாரத்தில் சரி எது, தவறு எது, என்று ஆராயாமல் சுய சிந்தனையே இல்லாமல், கண்மூடித்தனமாக, பிறரைக் கொடுமை படுத்துவதும்...
அதிகாரப் பற்றின் உச்சம்.

இவை எல்லாம் ஏன் நிகழ்கின்றன...?

பேராசையே காரணம்.
உலகில் சுயக்கட்டுபாட்டோடும், சுய ஒழுக்கங்களோடும் ஒருவர் வாழ்ந்தால் பற்றுதல் அளவுமுறையோடு நிற்கும்.

எண்ணுபவை, பார்ப்பவை, கேட்பவை, செய்பவை, அனைத்தும் தன் மனதிற்கும், பிறர் மனதிற்கும், நன்மையாக இருக்குமாறு கவனத்துடன் இருந்து கொண்டால் அனைத்தும் பிரபஞ்சத்திலிருந்து பிரதிபலிக்கும்.

அனைத்து உயிர்களையும் பொருட்களையும் ஒருவர் தெய்வமாகப் பார்த்தால் அந்த உயிர்களும், பொருட்களும், நம்மையும் மதித்து நல்லிணக்கத்துடன் இருக்கும்.

பொருள் பற்று, அதிகாரப் பற்று என்பது ஒருவரின் குணநலன்களுக்கும் மனநலன்களுக்கும் கேடு விளைவிப்பவை என்று உணர்ந்தால் அனைவரிடமும் அன்பு தோன்றும்.

அன்புடன் ஜெ.கே

Thursday, 14 June 2018

தினம் ஒரு மாற்றம் (14/06/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (14/06/2018)

"மனிதனின் உடலமைப்பும், மதியமைப்பும் மண்ணுலக அமைப்பும் மற்றனைத்தும் ஆய்ந்து, இனிவகுப்போம் ஒரு திட்டம், என்றும் எங்கும் எவருக்கும், வாழ்க்கையில் துன்பம் நீங்க-
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் (உலக சமாதானம் 13-ம் பாடல்.)

*ஒருவரது ஆரோக்கியம்* என்பது அவரவர்  மனதிலா? உடலிலா?
உணவிலா?
உடற்பயிற்சியிலா?மருத்துவரிடத்திலா?
உணவே மருந்தாக எடுப்பதிலா??
மருந்தையே உணவாக எடுப்பதிலா??

*மனம்* தான் அனைத்திற்குமே மூல காரணமாகத் திகழ்கின்றது என்பதை ஏற்க முடியும் என்றால் அதுவே உண்மை.

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பரிபூரண உடல்நலத்தோடு தான் வாழ்ந்தார்கள். அதற்கு அவர்கள் வாழ்ந்த இயற்கை வாழ்வியல் முறையும் அதன் அமைப்பும் அதாவது உடற்பயிற்சியை  வாழ்க்கையிலேயே உழைப்பாகவும், உணவை நொறுங்கிக் கூழாக்கி சாப்பிட்ட முறையும், ஆரோக்கியமான நற்சிந்தனையும், நல்ல பழக்கவழக்கங்களும், ஒற்றுமையும் அவர்களிடத்தில் இருந்ததே காரணம்.

இப்பொழுது அந்த உழைப்பு இருக்கிறதா?? ஒற்றுமை இருக்கிறதா??

கூட்டுக் குடும்பம் பாதுகாப்பையும் தீர்வையும் தரும்.

சரி, உணவை சீரணிக்கும் அளவாவது உடல் உழைப்பு உள்ளதா??

எங்கங்க !! காலையில சாப்பிட்டு விட்டு ஆபீஸ் போனா வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுக்கத் தான் தோணுது!! இதுல எங்க உடற்பயிற்சி செய்ய...ன்னு கேள்விகள் ஏராளம்.

மருத்துவரிடம் மணிக்கணக்காக அமர நேரம் இருக்கிறது.
T.v. Serial பார்க்க நேரம் உள்ளது..Fb,  Whats App போன்ற Apps களில் Chat செய்ய நேரம் உள்ளது.

*ஒரு மணி நேரம் பயணத்திற்கே எத்தனை சிக்னலை உயிர் பாதுகாப்பிற்காக கடக்கும் போது, வாழ்நாள் முழுவதுமான பயணத்திற்கு உடலை பாதுகாக்க விழிப்புணர்வு வேண்டும் தானே!!!*

*தன் உடலை,  வாழ்நாள் முழுவதும் கூடவே இருக்கும் இந்த உடம்பை காப்பதற்கு என்ன செய்ய வேண்டும் எனற சுய சிந்தனை வேண்டுமா??வேண்டாமா???*

சாப்பிடற சாப்பாட்டக் கூட அப்படியே முழுங்கி விடுறோம் மென்று சாப்பிடாமலேயே..

உழைப்புக்கும் உடற்பயிற்சிக்கும் எங்கே போவது??

அதுக்கு தனியா ஜிம்முக்கு போகணும்..

வாக்கிங் போகலாம்..... ஆனா  மழைகாலம் வந்தா அதுவும் கட்.

அப்ப என்ன தாங்க செய்யறது?? நீங்க கேக்கறது புரியுதுங்க....😊

*மனவளக்கலை* என்பது அன்றாட வாழ்க்கை முறையில் எப்படி வாழ வேண்டும் என்ற எளிய முறையை கற்றுக் கொடுக்கும் பண்பாட்டு யோகக் கல்வி முறை.

இது பயின்றால் போதும் அவரவர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து உடலையும் நலமாக வைக்க முடியும். மனதையும் செம்மையாக வைக்க முடியும்.

இதில் கற்று தன்னை ஒருவர் உணர்ந்து வாழ முடியும்.

அன்புடன் ஜெ.கே

Wednesday, 13 June 2018

தினம் ஒரு மாற்றம் (13/06/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (13/06/2018)

"ஆன்மீகத்துறை யென்ற அகல வழிப்பாதையிலே அடிவைத்து மென்மேலும் முன்னேறிப் போகுங்கால் அறிவுபெறும் அனுபவங்கள் வியப்பாகும் இனிமையாம் ஆன்மஒளி சுடர்விட்டு உள்ளுணர்வு பேறாகும்."

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். (ம.வ.க பாகம் 1, பக்கம் 64)

ஒருவரின் கல்வி எந்த அளவுக்கு வாழ்க்கைக்கு அவசியமோ அந்த அளவை விட பண்பு மிக மிக அவசியம்.

மேற்படிப்புப் படித்தால் பண்பு வளருமா??

அல்லது தன்னைத் தான் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பிறருடன் நல்லிணக்கத்துடன் பண்போடு பழகுவதும் இனிமையான சொற்களால் பேசுவதை மாற்றிக் கொண்டால் பண்பு வளருமா??
என்றால் ...

தனக்கும் பிறருக்கும் எந்த விஷயங்கள் எல்லாம் ஒத்து வருமோ அந்த விஷயங்களைத் தவிர, ஒத்து வராத விஷயங்களில் மிகுந்த கவனத்துடன், விழிப்புணர்வுடன், பண்பான, சொற்களை பயன்படுத்தி கற்ற கல்விக்கும், பெற்றோருக்கும், ஆசானுக்கும், பெருமை சேர்க்கும் வகையில், தன்னை பிறர் மதிக்கும் அளவு நடப்பது பண்புடைமையாகும்.

இப்பண்பும், மதிப்பும், ஒருவருக்கு மனவளக்கலை கல்வியினால் கிட்டும்.

மிக எளியமுறை இயற்கைத் தத்துவ பண்பாட்டுக்கல்வியை பயிற்சிமுறையாக SKY யோகாவில் பாடத்திட்டமாகவும், எளியோர் கற்கும் வகையிலும் கற்றுத் தரப் படுகிறது.

*அனைவருக்கும் முழுமை நல வாழ்வு கிடைப்பது பயிற்சி முறையில் மட்டுமே..*

*படித்தால் மட்டும் போதாது. செயல்பாடே அவசியம் இங்கு சுயமாக சிந்திக்க இந்த பயிற்சிமுறை உதவும். வாழ்க்கையில் ஒவ்வொரு பயிற்சிமுறையையும், பயன்படுத்தும் போது அளவிலா ஆனந்தம் உண்டாகும்.*

குடும்பத்திலும், வெளியுலக உறவுகளோடும், சூழ்நிலைக்குத் தகுந்தவாறு வளைந்து கொடுத்தும், அனுசரித்தும் போகவும், தன்னை மேம்படுத்தவும், இந்த பயிற்சிகள் உதவுகின்றன.

எதையுமே எதிர்கொள்ளும் சக்தியும் கிடைக்கின்றன.

அன்புடன் ஜெ.கே

தினம் ஒரு மாற்றம் (12/06/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம்  ஒரு மாற்றம்* (12/06/2018)

"அறிவு அதன் உயிர் காந்த அலையின்மூலம் ஐம்புலன்கள் வழியாக எதைத் தொட்டாலும் பொறி இயக்கம் தொடர் பொருளின் இயக்கம் ஒக்கப் பொருந்தும் அந்த அளவுக்குச் சீவகாந்தம் பெறும் மாற்றம் அழுத்தம், ஒலி, ஒளி, சுவைகள் பின்னும் மணம் எனும் ஐந்தாய் சீவகாந்தம் செறிவின் அளவு குறையும் நிகழ்ச்சியேதான் சீவனுக்கு இன்ப துன்ப உணர்வுகள் ஆம்.

-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். ம.வ.க. 1
(பக்.  182)

விடியலில் சூரியனின் வெளிச்சம் வந்து விட்டால் இருள் கண்களுக்குப் புலப்படாது.

அறிவுக்கு எட்டிய ஒன்று தான் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம்..... விளைவுகளெல்லாம்.

அறிவு தன்னை அறிதலில் ஈடுபடும் போது, துன்பம் சென்று, இன்பம் வரும், அமைதி வரும், பேரின்பம் கிட்டும்.

மனதின் ஓர்மை நிலையில் அனைத்துமே ஒன்று தான்.

மனதுக்கு பொருத்தமில்லாத உணர்வையே துன்பம், கவலை, கோபம், என்கிறோம்..

மனதுக்கு பொருத்தமான மகிழ்ச்சி, இன்பம் குதூகலம், பேரின்பம், எல்லாம் மனதின் அலைச்சுழலின் வேறுபாடுகள் தானே தவிர வேறு ஏதும் இல்லை.

மனதை பக்குவப்படுத்த பழகிக் கொண்டால் அனைத்தும் சமமே என்ற உணர்வு வந்துவிடும்.

மனதை ஒரே அலைச்சுழல் விரைவில் அமைதி நிலையில் வைத்துக் கொள்ள மனமது செம்மையாகும்.

வேற்றுமை உணராது ஒற்றுமையே நாடும். அன்பை மட்டுமே செய்யும்.

மனிதன் இறைவனும் வேறல்ல என்ற உணர்வும் வந்துவிட்டால் அனைவருக்கும் நலம் விளைவிக்கும் செயல்களையே செய்ய முனைவான்.

ஒரு மலைப்பாதையில் சுவடுகள் பதிக்கப் பதிக்கப் புல் நிறைந்த வழியில் பாதை உருவாகும். போகும் வழியில் முட்கள் கரடுமுரடான பாதைகள் இருக்கும். ஆனால் அதுவே கால் தடம் பதிக்கப் பதிக்க சமமான பாதையாக  உருவாகும்.

உணர்வுகளும் அவ்வாறே மனதை செதுக்க செதுக்க பக்குவமாகும். 

அன்புடன் ஜெ.கே

Monday, 11 June 2018

வாழ்க்கையின் உண்மை (11/06/2018)

தனது உடல் உழைப்பில் மட்டுமே வரும் வருமானம் நிலைக்கும்.

பிறரின் உழைப்பில் சுரண்டி வாழ்வது நிலைக்காது.

அது வேறு வழியில் அவசியமில்லாமலேயே செலவாகும்.

இதுவே இறைநீதி.

ஜெ.கே🌺

எதையுமே ஆழ்ந்து உற்று நோக்கினால் ஒவ்வொன்றிலுமே ஒரு பாடமும், படிப்பினையும் இருக்கும்.
கற்றுத் தேர்வது அவரவர் சாமர்த்தியம்.
கேள்விகளுக்கு பதிலை மட்டும் படித்தால் புத்தகத்தில் உள்ளது புரிந்து விடாது. ஏன்? எதற்கு? என்பதன் விளக்கம் புத்தகத்தில் இருப்பது போல் வாழ்க்கையின் ரகசியங்கள் மற்றும் அற்புதமான வழிமுறைகளும் வாழும் நாட்களில் வழிகாட்டியாக இருக்கும்.
அதை அதன் போக்கிலும் நமது பிடியிலும் கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தால்  சுலபமாக கடக்கலாம்.

ஜெ.கே🌺

தினம் ஒரு மாற்றம் (11/06/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (11/06/2018)

"தனக்குப் பொருள் இன்பம் தலைமைப் புகழ்வேண்டித் தான் பிறர்க்குத் தீங்கிழைப்போன் தாழ்ந்துத் துன்பமேற்பான் தன் பிறப்போ இறப்போ தன் வாழ்வோ இடை நிகழ்ச்சி தனி உண்மை நினைவோடு தான் ஆற்ற இன்ப மயம்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
ம.வ.க. 1 (பக். 178)

தைரியமும் தன்னம்பிக்கையும் எங்கிருந்து வருகிறது என்று கேட்டால்... ஒருவர் தனக்கும் பிறருக்கும் உண்மையாக நடக்கும் போது மட்டுமே தான் வரும்.

ஒவ்வொருவரும் இவ்வுலகில் சாதிக்கப் பிறந்தவர்கள் ஒவ்வொரு வகையிலும்...
பல்வேறு வகையிலும்...

அறிவையும் ஆற்றலையும் ஆக்கத்துறையில் செலுத்தி முன்னேற்றப் பாதையில் சென்றால் இறைவன் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார் என்பது உறுதி.

மன உறுதியும், விடாமுயற்சியும், தன்னடக்கமும், பணிவும், உயர்வை ஈட்டித்தரும் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்காது.

தனது *சுயம்* என்பதை வெளியே கொண்டு வர தயக்கம் தேவை இல்லை.

இறைவனின் பிள்ளைகள் தான் அனைவரும்.

ஒரு தாய் பிள்ளைகளை எப்படி உணவும், ஊட்டமும், செல்லத்தையும், சேர்த்து ஊட்டி அரவணைத்து வளர்ப்பது போல் இறைவன் அவருவருக்கான சுதந்திரத்தைத் தேடிக் கொள்ள சாவியை மனிதரிடம் கொடுத்து விட்டார்.

எந்த இடத்தில் போகிற வழியில் தனக்கான வழிகாட்டுதல் உள்ளது என்பது மனிதனின் தேடுதலில் தான் உள்ளது.

சரியாகத் தேடினால் புதையலே கிடைக்கும்.

அலட்சியமாகத் தேடினால் பதிலும் அவ்வாறே இருக்கும்.

பதில்களும், புதையலும் வெளியே இல்லை.
தன்னிடமே உள்ளது..

அமைதியும் இன்பமும் வெளியே இல்லை. அவரவர் செய்யும் கடமைகளில் விளைவாக உள்ளது.

விருப்பத்துடன் ஈடுபாட்டோடு அன்புடன் செய்ய அமைதி அங்கேயே இருப்பதைக் காண முடியும்

அன்புடன் ஜெ.கே

Sunday, 10 June 2018

இயற்கையின் அறிவு (10/06/2018)

நீ  பிரபஞ்சத்தின் ஒரு துகள் அல்ல. ஒரு துகளுக்குள் இருக்கும் பிரபஞ்சம்.

மனவிரிவு பிரபஞ்சத்தை உன்னுள் பார்க்க முடியும்.

ஜெ.கே

தினம் ஒரு மாற்றம் (10/06/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (10/06/2018)

"சுத்தவெளி சூன்யமாய் நிறைந்த தன்மை
சூட்சமமாய் அனுபவமாய் அறிந்து நிற்கும் தத்துவத்தின் முடிவான தானேயான தனையறிந்த விந்தையது தர்க்கம் வேண்டாம்."
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

இறைவன் தான் இப்பிறவியில், இவ்வுடலை, தேர்ந்தெடுத்து பாவங்களை கரைக்கிறார்.

அவன் தூய்மை பெற்று இறைநிலையோடு கலந்து விடட்டும் என்பதற்காகவே.

ஆனால் தனக்குள் தான் இறைவன் இருக்கிறார் என்பதற்கும், இறைவன் தான் அனைத்திற்குமே ஆதாரமாக இருக்கிறார்..., என்பதற்கும் வேறுபாடு உள்ளது..

கட + வுள்  என்பது தனக்குள் இருக்கும் இறைவனை உணர்வதற்கும், , அவரே தன்னை தாங்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறார் என்பதற்குமான வேறுபாடு அது. அப்பொழுது அகங்காரம் அழிந்துவிடும்.

இறையாற்றல் தான் ஒருவரை வழிநடத்திச் செல்ல முனைகிறது என்பதை ஒருவர் உணர்ந்தால்......... தவறுகள் செய்வதை நிறுத்தி விட்டு விழிப்புணர்வில் நற்செயல்களாற்றி, பிறவித் தொடரை அறுத்துவிட மனிதன் முனைப்பில் ஈடுபடுவார்.

ஆனால் தனக்குள்ளே இறைவன் இருக்கிறார் என்று அறியாமலேயே சிலர் தவறுகள் இழைக்கிறார்கள். சிலர் அறிந்த போதும், தவறுகளை இழைக்கும் போது இறைவனை மறந்து போய் விடுகிறார்கள்.

புலன் வயத்தால், தன்முனைப்பால், தவறுகளை இழைத்து மேலும் மேலும் பல பிறவிகளைத் தொடர்கிறார்கள்  மனிதர்கள்.

எங்கே தன்முனைப்பு எனும் Ego ஆட்சி செய்கிறதோ, அங்கே இறைவனை மனிதன் மறக்கிறான்.

எங்கே அன்பு ஆட்சி செய்கிறதோ, அங்கே இறைவன் மனிதனை மறப்பதில்லை.  அருகிலேயே வசிக்கிறார்.

மறப்பது மனித மனம் தானே தவிர, இறைவன் இல்லை என்பதை உணர வேண்டும்.

அப்பொழுதும் இறைவன் தன் பால் ஈர்க்கவே முயற்சிக்கிறார்....ஆனால் கர்மா, செயல் விளைவு, இறைநீதி  என்று ஒன்று இருக்கிறதே??

கோள்களை தாங்கியிருக்கும் இந்த சுத்தவெளிக்கு ஆற்றலும் அறிவும் உண்டென்றால்....

மனித உடலை தாங்கியிருக்கும் ஆன்மா என்கிற இறைவெளிக்கும் அறிவும், ஆற்றலும்  உள்ளது என்பது நினைவில் அனைவரும் வைக்க வேண்டும்.

அருட்பேராற்றலின் அன்புக் குரலை கேட்க எப்பொழுதும் சித்தமாக இருக்க வேண்டும்.

அன்புடன் ஜெ.கே

வாழ்க்கையின் நிதர்சனம் (10/06/2018)

யாரிடமும் கெஞ்சிக் கொண்டு தன்னை அடையாளப்படுத்தவோ, அங்கீகரிக்கவோ ஒருவர் தன்னுடைய ஆளுமைத்திறனை அடகு வைக்க வேண்டாம்.
மதிப்புத் தெரியாதவரிடம் மன்றாடவும் வேண்டாம்.
கடவுளுக்குத் தெரியும் யாருக்கு என்ன மதிப்பு என்று.
ஒருவரை எங்கே, எப்பொழுது, எந்த இடத்தில் உயரப்பறக்க விட வேண்டும் என்று அவரே கணிப்பார்.

ஜெ.கே

Saturday, 9 June 2018

தினம் ஒரு மாற்றம் (09/06/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (09/06/2018)

ஒன்றுமிலா ஒன்றேதான் ஈர்ப்புசக்தி ஓங்கியதோர் எழுச்சிநிலை அணுவாய் போச்சு ஒன்றான ஈர்ப்பணுவில் எழுச்சியாகும் ஊடுருவி நிறைந்த ஒரு கவர்ச்சியாயும் ஒன்று இரண்டாகி அவை ஒன்றில் ஒன்றாய் ஒவ்வோரணுவும் இயக்க நிலையமாகி ஒன்றை ஒன்று ஈர்த்துக் கவர்ந்து இயங்கியங்கி உண்டான மாறுதலே ஐம்பூதங்கள்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

ஏதுமற்ற சுத்தவெளி மட்டுமே அனைத்து கோள்களையும் தாங்கிக் கொண்டிருக்கிறது. சுத்தவெளியே  ஆற்றல் களமாகி இருக்கிறது.

அதற்கு மட்டுமே காந்த சக்தி உண்டு. அப்படியென்றால் அதில் இருக்கும் அனைத்து பொருளுக்கும் உயிர்களுக்கும் ஈர்ப்பு ஆற்றல் உண்டு தானே!

ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் பண்பு தான் சுத்தவெளியின் பேராற்றல் தன்மை.

மனிதன் உணவை ஈர்க்கும் போது அது  சீரணமாகி அதற்குரிய கால அவகாசத்தில் கழிவாகி வெளியேறி விடுகிறது.

எதுவும் சிறிது காலம் வரை மட்டுமே.

வாங்கும் பொருளும், தேங்கும் பணமும்,   நிலையில்லா பேராசையும் அதன் உண்மை உணரும் போது..ஓயும்.

பின்பு எது நிலைக்கக் கூடியது??

உண்மை என்பதே நிலைக்கும். இறையாற்றல் உண்மையை மட்டுமே ஈர்க்கும்.

தோற்றப் பொருட்கள் எல்லாமே மயக்கும் மாயை. அதன் ஈர்ப்பும் மாயை. அதற்கு மனம் மயங்கி தவறுகள் இழைக்கிறான் மனிதன். அதன் மேல் உள்ள ஈர்ப்பால்.

ஆனால் அளவு மீறும் போது எதுவுமே துன்பமாகிப் போகும் என்பது அவனது அறியாமையே காரணம்.

தியானப் பயிற்சியில் மட்டுமே 'தான்' எதற்காகப் பிறந்தோம் என்று கேள்விக்கு விடை கிடைக்கிறது.

மனிதன் தன்னை அறியவும் தன்னை திருத்தி தன்னை மேம்படுத்திக் கொள்ளவும் மட்டுமே பிறந்தது அப்பொழுது தான் தெரிய வருகிறது.

*நான் யார்?*
விடை அப்பொழுதே கிட்டும்.
காந்தத்தை உணர்வோம். இறைநிலையின் ஈர்ப்பு ஆற்றலை உணர்ந்து அதனுடன் இணைவோம்.

அன்புடன் ஜெ.கே

தினம் ஒரு மாற்றம். (08/06/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (08/06/2018)

எண்ணத்தை எண்ணத்தால் எண்ணி எண்ணி, எண்ணத்தை எண்ணத்தில் நிலைக்கச் செய்தால் எண்ணமே பழக்கத்தால் தெளிந்து போகும் எண்ணம் எழும்போதே 'இது ஏன்?'என்று எண்ணத்தால் ஆராய்ந்தால், சுலபமாக எண்ணத்தின் காரணமும் விளைவும் காணும், எழும் எண்ணம் யாவும் நற்பயனாய் மாறும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.(ஞானப் பேழை. பாடல் 41)

அருட்தந்தை அவர்கள் எண்ணத்தின் மகிமை பற்றி எண்ணம் ஆராய்தல் பயிற்சியில் கூறியுள்ளார்கள்.

எண்ணத்தையே எண்ணத்திற்கு காவல் வைக்க வேண்டும் என்றும் எண்ணத்தின் உயர்வை ஒட்டியே எண்ணத்தின் தரமும் பண்பும் மதிப்பும் கூடுகிறது என்றும் விளக்கியுள்ளார்கள்.

எண்ணம் எழும் போதே காரணம் கண்டுகொள்ள வேண்டும். விழிப்புநிலை வேண்டும்.

எந்த சூழ்நிலையிலும், ஒன்றை அவமதித்தோ, அலட்சியப்படுத்தியும் விட்டால் அதற்குண்டான விளைவையும் அவரவரே எதிர்கொள்ள நேரிடும்.

இதுவே இறைநீதியுமாகும்.

அனைத்தையும் மதித்து வாழ நினைக்கும் போது மட்டுமே அனைத்தும் நம்முடன் நல்லிணக்கத்துடன் இருக்கும்.

மனிதனில் மட்டும் அல்ல, எல்லா உயிர்ப்பொருளுக்கும் சடப் பொருளுக்கும் பொருந்தும்.
எது ஒன்றிலும் அன்புடன் நடத்தும் போது அதுவும் அவரவருக்கு அன்புடன் இணக்கத்துடன் செயல்களாற்றும். இதுவே அலையியக்கத் தத்துவமாகும். உண்மையும் கூட.

அன்புடன் ஜெ.கே