Monday, 30 July 2018

தினம் ஒரு மாற்றம் (30/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (30/07/2018)

மக்களில் சிலர் பேச்சு வழக்கில் எனக்குக் கோபம் குறையவே மாட்டேங்குது.. என்றும், ஒரு சிலர் எவ்வளவு கோயில் கோயிலா நேர்த்திக் கடன் பண்றேன் அப்பவும் எனக்குக் கஷ்டமே தீரல .. என்றும் ஒரு சிலர்... ஒரு பக்கம்... வெளியே பலருக்கு  நன்மைகளையும் செய்து கொண்டு இன்னொரு பக்கம்  வீட்டில் குடும்ப உறவுகளிடம் கடிந்து கொண்டும், உறவுகளிடம் கோபித்துக் கொண்டும் அவர்களிடம் வீணான மனவருத்தத்தையும் வாங்கிக் கொள்வார்கள்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயம் என்னவென்றால்.. கோபம்,  கஷ்டம் என்ற சொற்களின் பயன்பாட்டை விட்டுவிட்டு பொறுமையாக இருக்கிறேன் என்று கூறுவதினால் பொறுமை ஒருவரிடம் தானாகவே வர ஆரம்பிக்கும்.

கஷ்டம் என்ன சொல்லின் பயன்பாட்டை விட்டுவிட்டு எனக்கு இறைவன் நன்மைகளையே செய்கிறான் என்றும்,  அதில்நான் மனநிறைவாக இருக்கிறேன் என்றும் நினைப்பதால் அந்த மனநிறைவும் தானாகவே வரும்.

எதிர்மறை சொற்களை பயன்படுத்துவதை அறவே விட்டுவிட்டால் நேர்மறை தானாகவே ஒருவரிடம் உள்ளதை உணர முடியும்.

உடன் இருக்கும் உறவுகளை பகைத்துக் கொண்டு வெளியில் எவ்வளவு நன்மை செய்தாலும் அது செயல் விளைவு கணக்குப்படி பாவம் மற்றும் புண்ணியக் கணக்கில் இரண்டிலும் கணக்கு ஒன்றாக நிற்குமே தவிர நன்மை செய்வதால்  புண்ணியம் மட்டும் ஏறும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்???

உதாரணத்திற்கு    ஒரு இடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது .. வேறொரு இடத்தில் நீர் ஊற்றினால் அந்த நெருப்பு  அணையுமா??? நெருப்பு எரியும் இடத்தில் நீர் ஊற்றினால் தானே அணையும்.. அது போல் தான் அனைத்தும்.

முதலில் தன்னிடத்தில் திருத்தம் வந்தால் மட்டுமே மனம் அமைதி பெற முடியும்.

*"தப்புக் கணக்கிட்டுத் தானொன்று எதிர்பார்த்தால் ஒப்புமோ இயற்கைவிதி??*
*ஒழுங்கு அமைப்பிற்கு ஒத்தபடி அப்போதைக்கப்போது அளிக்கும் சரி விளைவு, எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவர் இதையுணரார்."*  - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
(ஞா.க. 1429)

யோகக் கலையில் ஈடுபட்டுள்ளவர்கள்  செயல் விளைவை உணர்ந்து அறச்செயலில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.

இயற்கை சட்டம் உணர்ந்து உலகில் இனிமை காண்பதே அறிவுடைமை. மகிழ்ச்சியுடன் அனைவருடனும் அன்பிணக்கத்துடன் அறவழி வாழ்வதே ஒரே வழி. எளிய வழியும் அதுவே.

அன்புடன் ஜெ.கே

No comments: