பஞ்சபூத நவகிரக தவம் செய்வது எப்படி?.
( நவகிரகங்களின் காந்த அலைகளிலிருந்து நம்மைநாமே காத்துக்கொள்ள பஞ்ச பூத நவகிரக தவம்)
★ இறையாற்றலின் தத்துவத்தை விஞ்ஞானப்பூர்வமாக விளக்கி, குண்டலினி உள்ளிட்ட பல்வேறு யோகங்களை எளிமைப்படுத்தி பலருக்கும் கற்பித்து, வாழ்நாளெல்லாம் மனிதகுல நன்மைக்கு பெருந்தொண்டாற்றியவர் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி.
நவகிரகங்களிலிருந்து வரும் காந்த அலைகளை ஏற்புடையதாகவும், தீமை செய்யும் அலைகளை நல்லவையாகவும் மாற்றும் சூட்சும வித்தையையும் "பஞ்சபூத நவகிரகத் தவம்' என்னும் தியான முறையாக அவர் வடிவமைத்துத் தந்துள்ளார்.
உலகெங்குமுள்ள அவரது லட்சக்கணக்கான அடியவர்கள் இதைச் செய்து பயன்பெறுகின்றனர்.
பஞ்சபூதங்களின்மீதும் நவகிரகங்களின் மீதும் மனதையும் அறிவையும் செலுத்தி தவம் செய்வதையே பஞ்சபூத நவகிரகத் தவம் என்கிறோம்.
நட்சத்திரங்கள், கோள்களின் இயக்கத்தால் ஏற்படும் காந்த ஆற்றல் நிலவுலகில் வாழும் உயிர்களை பாதிக்கின்றன.
குறிப்பாக மனிதர்களின் உயிருக்கும், உடலுக்கும், மனதிற்கும் நன்மை, தீமைகளை ஏற்படுத்துவதாய் அமைகின்றன.
மனித மனம் விரியும்பட்சத்தில், நமது வாழ்வில் மகிழ்ச்சியையும் நன்மையையும் அள்ளித்தரும்.
அப்படி முழு அறிவைப் பெற்ற நிலையில் மனமானது அமைதியையும் நிறைவையும் பெறும்.
★விரிந்த மனதும் தெளிந்த நுண்ணறிவும் வாழ்வில் வெற்றியை ஏற்படுத்தும்.
பிரபஞ்சப் பொருட்கள் அனைத்தும் பஞ்சபூதங்களால் ஆனவை. நாமும் பஞ்சபூதங்களால் ஆனவர்கள்.
பருவுடல் - நிலம்.
ரத்தம் - நீர்.
உடல் சூடு - நெருப்பு.
மூச்சு - காற்று.
உயிர் - ஆகாயம்.
ஆகாயமே மற்ற பூதங்களிலும் மனிதர்களுக்குள்ளும் இருப்பதால், ஐந்து பூதங்களையும் பிரபஞ்சத்தையும் மனித மனதால் உணரமுடியும்.
அந்த ஆகாயமே உயிராகவும் இருப்பதால் உயிர்க்கலப்பு எதனோடும் ஏற்பட முடியும்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் என்று ஒவ்வொரு பூதத்தின் பெருமை உணர்தல், உயிர்க் கலப்புப் பெறுதல், உற்பத்தி ரகசியம் தெரிந்துகொள்ளல், காப்புப் பெறுதல், பயன்கொள்ளல் என்பனவற்றை உணர்ந்து தியானித்தலே பஞ்சபூதத் தவம் எனப்படுகிறது.
★ அடுத்து நட்சத்திரம், கோள்களை நினைத்து நவகிரகத் தவம் செய்ய வேண்டும். சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன், செவ்வாய், வியாழன், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் ஒவ்வொன்றிலும் மனதைச் செலுத்தவேண்டும்.
ஒவ்வொரு கிரகத்தின் பெருமை, சூரியனைச் சுற்றி வரும் காலம், நிறம், நமது எந்த உடலுறுப்போடு தொடர்புள்ளது என்பவற்றைத் தெரிந்து தியானிக்க வேண்டும்.
அந்த கிரகங்கள் நமக்கு செய்யக்கூடிய நன்மைகள், அந்த கிரகத்திலிருந்து வரக்கூடிய அலைகளை நாம் ஏற்றுப் பயன் கொள்ள வேண்டும்.
★ அந்தந்த கிரகத்தினுடைய ரசாயன அமைப்பிற்குத் தக்கவாறும், மனிதர்களுடைய கருவமைப்பிற்குத் தக்கவாறும் கோள்களிலிருந்து வரும் அலைகளின் பாதிப்பு அமையும்.
கிரகங்களிடம் நட்புணர்வோடு உயிர்க்கலப்பு பெறுவதால், அதனால் ஏற்படும் பாதிப்பு குறையும் என்பதையும், நன்மைகள் விளையும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
★ பஞ்சபூதத் தவம் செய்யும் முறை
முதலில் கீழுள்ள நான்கு வேண்டுதல்களை மும்மூன்று முறை சொல்லி தியானிக்கவும்.
1. காப்பு: அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துவதாகவும் அமைவதாக.
2. இடத்தூய்மை: நாம் அமர்ந்துள்ள இடத்தைச் சுற்றிலும் நல்ல தெய்வீக ஆற்றலே நிரம்பின.
3. அருட்பேராற்றல் உடலிலே, உயிரிலே அலை அலையாகப் பாய்ந்து நிரம்புவதை உணர்கிறேன்.
4. அன்னைக்கு வணக்கம்; தந்தைக்கு வணக்கம்; ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு வணக்கம்.
இதன்பின் பஞ்சபூதங்களில் ஒன்றான மண் என்ற தத்துவத்தின்மீது தவத்தைத் தொடங்குவோம். நிலத்திற்கு அறிகுறியாக இந்தப் பூவுலகையே மனதில் கொள்வோம்.
● இந்தப் பூவுலகம் மிகப்பெரியது. 25,000 மைல் சுற்றளவுடையது. மண், உலோகங்கள், ரசாயனங்கள் போன்றவற்றாலானது.
தன்னைத்தானே மணிக்கு 1,000 மைல் வேகத்தில் சுற்றிக்கொள்கிறது. சூரியனின் பாதையில் நாள் ஒன்றுக்கு சுமார் 16 லட்சம் மைல் ஓடுகிறது. இத்தகைய வியத்தகு கோள் இந்த நிலம்.
● இதன் பெருமையையும் மதிப்பையும் மன விரிவுகொண்டு மதித்துப் போற்றுவோம்.
● இதனோடு ஒன்றிக்கலந்து உயிர்த் தொடர்புகொண்டு, அதனுடைய தெய்வீகத் தன்மையை கிரகித்துக்கொள்வோம்.
● பிரபஞ்சப் பரிணாமத்தில் மண்ணின் உற்பத்தி ரகசியத்தை உணர்ந்து கொள்வோம்.
● இந்த நிலவுலகம் என்ற மண்ணினாலும், மண்ணிலிருந்தும் வாழ்நாள் முழுமைக்கும் காப்புப் பெறுவோம்.
● மண்ணைப் பயனுள்ள முறையிலே பயன்படுத்திக்கொள்ளத்தக்க விஞ்ஞானத்தை வளர்த்துக்கொள்வோம்.
மண் என்ற நிலவுலகின்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம்.
(இரண்டு நிமிடம் உலகத்தை எண்ணி தியானிக்கவும்.)
அடுத்து பிரபஞ்சப் பரிணாமத்தில் நான்காவது தத்துவமாகிய நீரின்மீது தவம் தொடங்குவோம்.
● இந்தப் பூவுலகம் நூற்றுக்கு 72 பாகம் நீரால் சூழப்பட்டுள்ளது. நீரினுடைய இருப்பை மேகங்களிலும், தாவரங்களிலும், உயிரினங்களிலும் நாம் காணமுடிகிறது. நீர் உயிர்களின் வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.
● நீரின் பெருமையையும் மதிப்பையும் மனவிரிவு கொண்டு மதித்துப் போற்றுவோம்.
● நீரோடு ஒன்றிக் கலந்து உயிர்க்கலப்புப் பெறுவோம்.
● பிரபஞ்சப் பரிணாமத்தில் நீரின் உற்பத்தி ரகசியத்தை உணர்ந்து கொள்வோம்.
● நீரிலிருந்தும், நீரினாலும் வாழ்நாள் முழுமைக்கும் காப்புப் பெறுவோம்.
● நீரைப் பயனுள்ள முறையிலே பயன்படுத்துகின்ற விஞ்ஞானத்தை வளர்த்துக் கொள்வோம்.
நீரின்மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம்.
(இரண்டு நிமிடம் தியானிக்கவும்).
பிரபஞ்சப் பரிணாமத்தில் மூன்றாவது தத்துவமாகிய நெருப்பின்மீது தவம் இயற்றுவோம்.
● பூமி தன்னைத்தானே வேகமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதனால் அதன் கனத்த அணுக்களெல்லாம் நடுமையத்தில் நெருக்கமாகக் கூடிக்கொண்டிருக்கின்றன.
அந்த நெருக்கத்தால் அணுச்சிதைவு ஏற்பட்டு எப்பொழுதும் ஒரு பெரிய நெருப்பு பூமியின் நடுமையத்தில் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கிறது.
அதனுடைய கனல் பூமியின் மேற்பகுதி வரை வந்து, அங்கு வாழும் உயிர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துக் கொண்டேயிருக்கிறது.
அந்தப் பெருநெருப்பையே தவத்திற்கு மனதில் கொள்வோம்.
● நெருப்பின் பெருமையையும் மதிப்பையும் மனவிரிவு கொண்டு மதித்துப் போற்றுவோம்.
● நெருப்போடு ஒன்றிக் கலந்து, உயிர்க்கலப்புப் பெறுவோம்.
● பிரபஞ்சப் பரிணாமத்தில் நெருப்பின் உற்பத்தி ரகசியத்தை உணர்ந்து கொள்வோம்.
● நெருப்பிலிருந்தும், நெருப்பினாலும் வாழ்நாள் முழுமைக்கும் காப்பு பெறுவோம்.
● நெருப்பைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துகின்ற விஞ்ஞானத்தை வளர்த்துக் கொள்வோம்.
● நெருப்பின்மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம்.
(இரண்டு நிமிடம் தியானிக்கவும்).
பிரபஞ்சப் பரிணாமத்தில் இரண்டாவது தத்துவமாகிய காற்றின்மீது தவத்தைத் தொடங்குவோம்.
● நிலவுலகைச் சுற்றி சுமார் 19 மைல் உயரத்திற்கு அடர்த்தியாகவும், அதற்கு மேல் லேசாகவும் கவசம்போல் சூழ்ந்து காற்று இயங்கிக் கொண்டிருக்கின்றது.
● உயிர்களின் வாழ்க்கைக்கு காற்று எவ்வளவு அவசியம் என்பதை உணர்வோம்.
● மனவிரிவு கொண்டு காற்றின் பெருமையையும் மதிப்பையும் உணர்ந்து போற்றுவோம்.
● அதனோடு ஒன்றிக்கலந்து, உயிர்த்தொடர்பு கொண்டு அதனுடைய தெய்வீகத் தன்மையை கிரகித்துக் கொள்வோம்.
● பிரபஞ்சப் பரிணாமத்தில் காற்றின் உற்பத்தி ரகசியத்தை உணர்ந்து கொள்வோம்.
● காற்றிலிருந்தும், காற்றினாலும் வாழ்நாள் முழுமைக்கும் காப்புப் பெறுவோம்.
● காற்றைப் பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ளத்தக்க விஞ்ஞானத்தை வளர்த்துக்கொள்வோம்.
காற்றின்மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம்.
(இரண்டு நிமிடம் தியானிக்கவும்).
பிரபஞ்சப் பரிணாமத்தில் முதல் தத்துவமாகிய விண்ணின்மீது தவம் தொடங்குவோம்.
● இந்தப் பிரபஞ்சத் தோற்றங்களுக்கெல்லாம் காரணமாகிய நுண்ணிய மூலக்கூறுதான் விண் என்ற உயிராற்றல்.
நம் உடலில் உயிராற்றலாகவும், பிரபஞ்சம் முழுவதும் ஆற்றல் களமாகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது விண்.
இந்த விண்ணின் சேர்க்கைதான் நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற மற்ற நான்கு பூதங்களும்.
● மனவிரிவு கொண்டு விண்ணின் பெருமையையும் மதிப்பையும் உணர்ந்து போற்றுவோம்.
● அதனோடு ஒன்றிக்கலந்து, உயிர்க்கலப்புப் பெற்று அதனுடைய தெய்வீகத் தன்மையை கிரகித்துக் கொள்வோம்.
● பிரபஞ்சப் பரிணாமத்தில் விண்ணின் உற்பத்தி ரகசியத்தை உணர்ந்து கொள்வோம்.
● விண்ணிலிருந்தும், விண்ணினாலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லாத் தொழில்களிலும் காப்புப் பெறுவோம்.
● விண்ணைப் பயனுள்ள முறையில் பயன்படுத்தும் விஞ்ஞானத்தை அறிந்துகொள்வோம்.
விண்மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம்.
(பிரபஞ்சம் முழுவதும் உள்ள விண் நிறைந்த சக்திக் களத்தை நோக்கி இந்தத் தவத்தை இரண்டு நிமிடம் இயற்றவேண்டும்.)
★நவகிரகத் தவம்
விண் நிறைந்த சக்திக் களமாகிய பிரபஞ்சத்தில் பலகோடி நட்சத்திரங்களைப் பார்க்கின்றோம்.
ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு சூரியனே. அவற்றில் ஒரு நட்சத்திரம்தான் இப்பூவுலகம் சுற்றி வந்துகொண்டிருக்கும் சூரியன்.
சூரியனையும் அதைச் சார்ந்த கோள்களையும் நவகோள்கள் என்று அழைக்கிறோம்.
சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லாக் கோள்களிலிருந்தும் வருகின்ற காந்த அலைகளும், மனிதனின் உடலோடும் உயிரோடும் நேரடியான தொடர்புள்ளவை.
இப்பொழுது இக்கோள்களின்மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம்.
சூரியன்மீது தவம் தொடங்குவோம்.
● சூரியன் ஒரு மாபெரும் நெருப்புக்கோளம். இதன் விட்டம் 8.7 லட்சம் மைல் என்று கணக்கிட்டுள்ளார்கள். சூரியன் பூமியைவிட 1,400 மடங்கு உருவத்தில் பெரியது. 25 நாட்களுக்கு ஒரு சுற்று வீதம் தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது.
● சூரியன் ஆரஞ்சு நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நம் உடலிலுள்ள எலும்போடு தொடர்புடையவை.
● சூரியனுடைய காந்த அலைக்கதிர்கள் வாழ்வில் வெற்றியையும் அறிவு மேன்மை, கல்வி மேன்மை, வாழ்க்கை வளங்கள் இவையனைத்தையும் அளிக்க வல்லவை.
● சூரியனின் காந்த அலைக்கதிர்களை ஏற்று நம் உடலோடும் உயிரோடும் ஒன்றுபடுத்திக் கொள்வோம். அவை எப்பொழுதும் நமக்கு நன்மையே செய்து கொண்டிருக்குமாக.
சூரியனின்மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம்.
(இரண்டு நிமிடம் தியானிக்க வேண்டும்.)
புதன் என்ற கோள்மீது தவம் இயற்றுவோம்.
● சூரியனிலிருந்து சுமார் மூன்று கோடி மைல்களுக்கப்பால் முதல் வட்டப் பாதையில் சூரியனை வலம்வந்து கொண்டிருக்கக்கூடிய கோள் புதன். இதன் விட்டம் 3,030 மைல்கள். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 88 நாட்களை எடுத்துக்கொள்கிறது.
● புதன், பசுமை நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நம் உடலில் உள்ள தோலோடு தொடர்புடையன.
● இந்த காந்த அலைக்கதிர்கள் நமக்கு அறிவு மேன்மை, கல்வி மேன்மை, வாழ்க்கை வளங்கள் இவை அனைத்தையும் அளிக்க வல்லவை.
● புதனுடைய பசுமை நிறமான காந்த அலைக்கதிர்களை ஏற்று நம் உடலோடும் உயிரோடும் ஒன்றுபடுத்திக்கொள்வோம். அவை நமக்கு எப்பொழுதும் நன்மையே செய்துகொண்டிருக்குமாக.
புதன் என்ற கோள்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம்.
(இரண்டு நிமிடம் தியானிக்க வேண்டும்.)
சுக்கிரன் என்ற கோள்மீது தவம் தொடங்குவோம்.
● இது சூரியனிலிருந்து இரண்டாவது வட்டப்பாதையில் சுமார் ஆறு கோடி மைல்களுக்கு அப்பால் சூரியனை வலம் வந்துகொண்டிருக்கிறது.
இதனுடைய விட்டம் 7,625 மைல்கள் என்று கணக்கிட்டுள்ளார்கள். இது சூரியப் பாதையில் ஒருமுறை சுற்றிவர 225 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.
● சுக்கிரன் வெண்மை நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நமது உடலில் உள்ள சுக்கிலத்தோடு தொடர்புடையன.
● இக்கதிர்கள் நமக்கு மனமகிழ்ச்சியையும், உயர் நட்பையும், வாழ்க்கை வளங்களையும் அளிக்க வல்லது.
● சுக்கிரனுடைய காந்த அலைக்கதிர்களை ஏற்று நம் உடலோடும் உயிரோடும் ஒன்றுபடுத்திக்கொள்வோம். அவை நமக்கு எப்பொழுதும் நன்மையே செய்துகொண்டிருக்குமாக.
சுக்கிரன் என்ற கோள்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம்.
(இரண்டு நிமிடம் தியானிக்க வேண்டும்.)
சந்திரன் என்ற கோள்மீது தவம் இயற்றுவோம்.
● சூரியனிலிருந்து மூன்றாவது வட்டப்பாதையில் சுமார் ஒன்பது கோடியே முப்பது லட்சம் மைல்களுக்கு அப்பால் சூரியனை சுற்றிவந்து கொண்டிருக்கும் கோள் பூவுலகம்.
இப்பூவுலகிலிருந்து சுமார் 2,40,000 மைல்களுக்கு அப்பால் இப்பூவுலகை வலம் வந்துகொண்டிருக்கும் துணைக்கோள் சந்திரன்.
இதனுடைய விட்டம் 2,175 மைல்கள் என்று கணக்கிட்டுள்ளார்கள். இது ஒருமுறை பூமியைச் சுற்றிவர சுமார் 29 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.
● சந்திரன் வெண்மை நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டிருக்கிறது. இக்கதிர்கள் நம் உடலிலுள்ள ரத்தத்தோடு தொடர்புடையன.
● இந்த காந்த அலைக்கதிர்கள் நம் உடலில் ஓடும் ரத்த ஓட்டத்தை சீரமைப்பது; அறிவு வளம், வாழ்க்கை வளங்கள் ஆகியவற்றை அளிக்கவல்லது.
● சந்திரனுடைய காந்த அலைக்கதிர்களை ஏற்று நம்மோடு ஒன்றுபடுத்திக் கொள்வோம்.
● அவை எப்பொழுதும் நமக்கு நன்மையே செய்துகொண்டிருக்குமாக.
சந்திரன் என்ற கோள்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம்.
(இரண்டு நிமிடம் தியானிக்கவும்.)
செவ்வாய் என்ற கோள்மீது தவத்தைத் தொடங்குவோம்.
சூரியனிலிருந்து நான்காவது வட்டப் பாதையில் சுமார் 14 கோடி மைல்களுக்கு அப்பால் சூரியனை வலம்வந்து கொண்டிருக்கும் கோள் செவ்வாய்.
இதனுடைய விட்டம் 4,300 மைல்கள். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 18 மாதங்களை எடுத்துக்கொள்கிறது.
● செவ்வாய் செந்நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நம் உடலிலுள்ள மஜ்ஜையோடு தொடர்புடையன.
இந்த காந்த அலைக்கதிர்கள் விஞ்ஞான அறிவையும் மெய்யறிவையும் தைரிய உணர்வையும் வாழ்க்கை வளத்தையும் அளிக்கவல்லவை.
● செவ்வாயினுடைய காந்த அலைக்கதிர்களை ஏற்று நம் உடலோடும் உயிரோடும் ஒன்றுபடுத்திக்கொள்வோம்.
● இவை எப்பொழுதும் நமக்கு நன்மையே செய்துகொண்டிருக்குமாக.
செவ்வாய் என்ற கோள்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம்.
(இரண்டு நிமிடம் தியானிக்க வேண்டும்.)
குரு என்ற ஆற்றல்மிக்க கோள்மீது தவம் இயற்றுவோம்.
சூரியனிலிருந்து ஐந்தாவது வட்டப்பாதையில் சுமார் 48 கோடி மைல்களுக்கு அப்பால் சூரியனை வலம் வந்துகொண்டிருக்கும் கோள் குரு.
இதனுடைய விட்டம் 88,000 மைல்கள் என்று கணக்கிட்டுள்ளார்கள். இது சூரியப் பாதையில் ஒரு சுற்று முடிக்க 12 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.
● குரு பொன்னிறமான காந்த அலைக் கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நம் மூளைசெல்களோடு தொடர்புடையன.
குருவினுடைய காந்த அலைக்கதிர்கள் மெய்யுணர்வையும் அனைத்து வாழ்க்கை வளங்களையும் அளிக்கவல்லன.
● குருவினுடைய காந்த அலைக்கதிர்களை ஏற்று நம் உடலோடும் உயிரோடும் ஒன்று படுத்திக் கொள்வோமாக.
● அவை நமக்கு எப்பொழுதும் நன்மையே செய்துகொண்டிருக்குமாக.
குரு என்ற கோளின்மீது செலுத்தி தவம் இயற்றுவோம்.
(இரண்டு நிமிடம் தியானிக்க வேண்டும்.)
சனி என்ற ஆற்றல்மிக்க கோள்மீது தவம் இயற்றுவோம்.
சூரியனிலிருந்து ஆறாவது வட்டப் பாதையில் சுமார் 88 கோடி மைல்களுக்கு அப்பால் சூரியனை வலம்வந்து கொண்டிருக்கும் கோள் சனி.
இதனுடைய விட்டம் 75,000 மைல்கள் என்று கணக்கிட்டுள்ளார்கள். இது சூரியப் பாதையில் ஒரு சுற்றுவர 30 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.
சனி சாம்பல் நிறமான காந்த அலைக் கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இந்தக் கதிர்கள் உடலில் உள்ள நரம்புகளோடு தொடர்புடையன.
● சனியினுடைய இந்த சாம்பல் நிறமான காந்த அலைக்கதிர்கள் நீண்ட ஆயுளையும் உடல்நலத்தையும் அளிக்கவல்லன.
● சனியினுடைய காந்த அலைக்கதிர்களை ஏற்று நம் உடலோடும் உயிரோடும் ஒன்றுபடுத்திக்கொள்வோம். அவை நமக்கு எப்பொழுதும் நன்மையே செய்து கொண்டிருக்குமாக.
சனி என்ற கோள்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம். (இரண்டு நிமிடம் தியானிக்கவும்.)
ராகு, கேது என்ற காந்த அலைப் பாதைகளின்மீது தவம் இயற்றுவோம்.
சூரியனுடைய மையத்தில் அணுக்கள் செயலற்று நின்றுவிடுகின்றன.
அவை சுத்தவெளியாக, பிரம்மமாக மாறிக்கொண்டிருக்கும் நிலை.
மேலும் அவை மிகவே, அங்கு நிற்க முடியாமல் ஒரு கோடுபோல் சூரியனின் மையத்தில் ஆரம்பித்து பிரபஞ்சத்தையெல்லாம் கடந்து சுத்தவெளியுடன் கலந்துகொண்டிருக்கின்றன.
இவ்வாறு சூரியனின் இருபுறமும் எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய கருநிறமான காந்த அலைப் பாதைகளைத்தான் ஒரு புறம் ராகு என்றும், மறுபுறம் கேது என்றும் கூறுகிறோம்.
● ராகு, கேது காந்த அலைப் பாதைகளிலிருந்து கருமை நிறமான காந்த அலைக் கதிர்கள் வீசிக்கொண்டுள்ளன. இக்கதிர்கள் நம் உடலில் உள்ள ஓஜஸ் என்ற சுத்த சக்தியோடு தொடர்புகொள்கின்றன.
● இந்த காந்த அலைகள் மெய் விளக்கம், உடல்நலம், வாழ்க்கை வளங்கள் ஆகியவற்றை அளிக்கவல்லன.
● ராகு, கேதுவின் காந்த அலைகளை நாம் ஏற்று உடலோடும் உயிரோடும் ஒன்றுபடுத்திக்கொள்வோம்.
● அவை நமக்கு எப்பவாழ்வில் நன்மையே செய்துகொண்டிருக்குமாக.
ராகு, கேது காந்த அலைப்பாதைகளின்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம். (இரண்டு நிமிடம் தியானிப்போம்).
★ பிரபஞ்சக் களம்
இப்பேரியக்க மண்டலம் என்ற பிரபஞ்சக் களத்தில் சூரிய குடும்பத்தைப் போல் கோடானுகோடி சூரியக் குடும்பங்கள் உள்ளன.
அவற்றையெல்லாம் நட்சத்திரங்கள் என்று அழைக்கின்றோம்.
இப்படி பிரபஞ்சம் முழுவதும் உள்ள எல்லா நட்சத்திரக்கூட்டங்களையும் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற 12 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
இந்த அனைத்து நட்சத்திரத் தொகுதிகளிலிருந்து காந்த அலைகள் வீசிக்கொண்டிருக்கின்றன.
இக்காந்த அலைகள் நமக்கு நன்மையே செய்துகொண்டிருக்குமாக.
★ மெய்ப்பொருள்
பிரபஞ்சக் களத்தைக் கடந்து மனதை விரிக்கிறோம். எல்லையற்றதாக இருக்கின்ற சுத்தவெளி, மெய்ப்பொருள்.
அதே மெய்ப் பொருள் இப்பேரியக்க மண்டலம் முழுவதிலும் ஒவ்வொரு அணுவுக்கு மத்தியிலும் இரண்டு அணுக்களுக்கு இடையேயும் இருப்பதை உணர்கிறோம்.
இந்த மெய்ப்பொருள் என்ற சுத்த வெளியே நமக்குள்ளாக அறிவாக இயங்கிக்கொண்டிருப்பதையும் உணர்கிறோம்.
அந்த மெய்ப்பொருள் என்ற சுத்த வெளியே நமக்குள்ளாக கெட்டிப் பொருளான உடல், ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று, உயிர் என்ற ஐந்து பௌதிகப் பிரிவுகளாக இயங்குவதை உணர்கிறோம்.
இவை எல்லாவற்றையும் அவ்வறிவே ஆண்டுகொண்டிருப்பதையும் உணர்கிறோம்.
இதேபோன்று ஒவ்வொரு மனிதரிடத்தும் ஒவ்வொரு உயிரிடத்தும் அமைந்திருப்பதையும் உணர்கிறோம்.
இவ்வாறு மெய்ப்பொருள் என்ற பிரம்மமே பரிணாமத்தில் எல்லா உயிர்களாகவும் வந்துள்ளன என்பதை உணர்ந்து,
எந்தவொரு உயிருக்கும் துன்பம் செய்விக்காமலும்; எங்கு, எந்தவொரு உயிர் துன்பப்பட்டாலும் அந்த துன்பத்தை போக்குமளவிற்கு நம் செயல்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு கருணையோடும் வாழமுயல்வோம்.
இந்த விரிவான மனநிலையில் எப்பொழுதும் நாம் மறவாது மனதில் கொண்டு வாழ்வில் சிறப்பாக வாழ செயல்பட முயல்வோம்.
★ அருட்பேராற்றலின் கருணையினால் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வோம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
நம் மனதில் அமைதி நிலவட்டும்!
நம்மைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும்!
உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்!
அமைதி! அமைதி! அமைதி!
★ பஞ்சபூத நவகிரகத் தவத்தின் பயன்கள்
நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ கோள்களிலிருந்தும் பொருட்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் அலைகள் வந்துகொண்டே இருக்கும். அந்த அலைகள் நமக்கு சாதகமாகவும் பாதகமாகவும் இருக்கலாம்.
பாதகம் என்பது வெளியிலிருந்து வரக்கூடிய ஆற்றல் நம்மிடையே இருக்கக்கூடிய ஆற்றல்மீது அதிக அழுத்தம் தருமானால், அதைத் தாங்க முடியாதபொழுது அது துன்பத்திற்குரியதாக மாறுகிறது. அதைத்தாங்கும் பொழுது அதுவே இன்பமாக மாறுகிறது.
நமக்கு எப்போதுமே கோள்களிலிருந்து வரக்கூடிய அலையினாலும், பொருட்களிடமிருந்து வரக்கூடிய அலையினாலும், நாம் செய்கின்ற செயல்களிலிருந்து வரக்கூடிய அலையினாலும் அதிகமாக பாதிக்கப்படாத நிலையான தாங்கும் சக்தி அவசியம்.
அந்த ஆற்றலை ஏற்படுத்திக் கொள்வதற்காக நாம் நமது உடல், உயிர், சீவகாந்தம், மனம் என்ற நான்கையும் சேர்த்து ஒவ்வொரு பஞ்சபூதப் பிரிவோடும் இணைக்கவேண்டும்.
இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவு என்பது பஞ்சபூதங்களின் நன்மையை உணர்ந்து கொள்வதுதான். ஏனென்றால் பஞ்சபூதங்களையும் அதிலிருந்து வரக்கூடிய விளைவுகளையும் தவிர வேறொன்றையும் மனிதன் அறிவதில்லை.
எனவே, இதையெல்லாம் அறிந்துகொள்வதற்குரிய சங்கற்பத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
★ பஞ்சபூதத் தவம் செய்வதன் மூலமாக எந்தப் பொருளோடும் சக்தியோடும் இணைந்து பயன்கொள்ள முடிகிறது.
எந்தப் பொருள் சக்தியாலும் விளையக்கூடிய தீமைகளிலிருந்தும் காப்பு பெறமுடிகிறது.
அந்தப் பொருள் சக்தியைப் பற்றிய முழு விளக்கமும் தெளிவும் பெற்றுக்கொள்ள முடிகிறது.
உடலுக்கும் உயிருக்கும் ஆக்கம் கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.
ஒவ்வொரு கோளும் பல ரசாயனங்களைக் கொண்டு பரிணாமம் அடைந்ததற்குத் தக்க வாறு அலை வீசிக்கொண்டே இருக்கின்றது.
ரசாயன அம்சங்கள் அடைந்த அந்த அலை எந்தப் பொருள்மீது வீசுகிறதோ, அந்தப் பொருளிலே அந்த அலையின் தன்மை அத்தனையும் தூண்டிவிடும்.
ஒன்பது கோள்களின் தன்மைகளும், அதன் அலைகளும் வந்துகொண்டே இருக்கின்றன.
உடலுக்கு ஆறுவகையில் ரசாயன மாற்றங்கள் உண்டாகின்றன.
கருவமைப்பு, உணவு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரம், சந்தர்ப்ப மோதல் என்ற ஆறு வகையில் உண்டாகின்ற ரசாயன வேகத்திற்குத் தக்கவாறு காந்தக் களம், மின்சாரக் களம் மற்றும் இயந்திரக் களம் எல்லாமே பாதிக்கப்படுகின்றன.
★ நாம் இருக்கக்கூடிய நிலையை மாற்றிக் கொள்ளும்போது, நம்மை பாதிக்கக்கூடிய அலைகளைக்கூட நல்ல அலைகளாக மாற்றி, நமக்கு இனிமையான அலைகளாக மாற்றி ஏற்பு சக்தியைப் பெற்றுக்கொள்கிறோம்.
நமக்கு தீமை வராமல் தாங்கும் சக்தியைப் பெறுவதற்கு, ஒவ்வொரு கோள்களோடும் தொடர்புகொண்டு; மனத்தாலே அந்த அலையோடு தொடர்புகொண்டு, உயிர்க்கலப்புப் பெற்று சங்கற்பம் எடுத்துக்கொள்கிறோம்.
ஒன்பது கோள்களிலிருந்தும் வரக்கூடிய எந்த அலையும் நமக்கு ஒத்ததாகவே இருக்க வேண்டும் என்று ஏற்புச் சக்தியை ஏற்படுத்திக் கொள்கிறோம்
-- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment