Tuesday, 16 April 2019

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

வாழ்க வளமுடன்

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

பாகம் : 24

அன்பார்ந்த நண்பர்களே!

வணக்கம். வாழ்க வளமுடன்.

அருட்தந்தை அவர்களுடன் யான் பெற்ற புற அனுபவங்களை, தொடக்கத்தில் சில பாகங்களில் எழுதியிருந்தேன். அண்மையில் சில பாகங்களில், எனது வாழ்க்கையில் முதன் முதலாக அருட்தந்தை அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற அக (ஆழ்மன) அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித வாழ்வின் நோக்கம் முழுமைப்பேறு. இதனை அடைவதற்காகவே அருட்தந்தை அவர்கள் அன்போடும், கருணையோடும் வழங்கியுள்ள மனவளக்கலை யோகாவைக் கற்று, நடைமுறையில் பயன்படுத்தி வருகிறோம்.

எனவே, மனித அமைப்பின் இன்றியமையாத சாதனங்களான (phenomena)
உயிர், மனம், அறிவு, தெய்வம் (இதுகாறும் விஞ்ஞானத்தில் விளக்கப்படாதவை) - இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற அருட்தந்தை அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் யான் பெற்ற இன்பம் (பேரின்பம்) அனைவரும் பெற வேண்டுமென்ற பெரு நோக்கத்துடன் தான் இந்த 'அக' அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மனதின் அடித்தளம் இறைநிலை

நமது உடலில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரின் அமைப்பு, அதனுள் இடம்பெற்றுள்ள தெய்வம் (சுத்தவெளி), அறிவு, மனம் இவற்றைப் பற்றியும், இவற்றிற்கிடையேயானத் தொடர்பு குறித்தும் இதுகாறும் சிந்தனை மேற்கொண்டோம்.

இனி, மனித வாழ்விற்கு மிகவும் இன்றியமையாத சாதனமாகிய மனதுக்கும், தெய்வத்திற்குமிடையே உள்ள
தொடர்பு குறித்து அருட்தந்தை அவர்களின் விளக்கத்தைக் காண்போம்.

உயிரின் அமைப்பில் மூன்று சாதனங்கள் (அங்கங்கள் -phenomena) இருக்கின்றன என்பதை அறிவோம். இவற்றுள் உயிர் (உயிர்த்துகள்) என்ற சாதனத்தின் உட்பொருளாக இருப்பது சுத்தவெளிதான் என்பதையும், சுத்தவெளியின் சிறப்பு மிக்கத் தன்மையாகிய அறிவு தான் மனமாக (அறிவின் அலையாக) செயல்படுகிறது என்பதையும் இதற்கு முந்தைய பகுதிகளில் விளக்கம் பெற்றோம்.

மனத்தின் அடித்தளமாக எவ்வாறு தெய்வம் உள்ளது என்பதை நாளைய பதிவில் காண்போம்.

தொடரும்....

No comments: