கேள்வி : சுவாமிஜி, அகத்தவம் செய்யாமலே மனிதன் நல்வாழ்வு வாழ்ந்து இறைநிலை அடைய முடியாதா?
மகரிஷியின் பதில் : மனிதன் இரண்டடுக்கு வினைப்பயனை உடையவன். பிறந்தது முதல் இன்று வரை என்னென்ன செயல்களைச் செய்தானோ அது பிராரப்த கர்மம் எனப்படும். கருவழியே அவனது முன்னோர்களிடமிருந்து என்ன பதிவுகளைப் பெற்றானோ அது சஞ்சித கர்மம் என்று சொல்லக்கூடிய பழவினையாகும். இவையிரண்டும் சேர்ந்த தொகுப்பே ஒரு மனிதனின் தன்மை (Personality) ஆகும்....
இதன் வழியாகத்தான் மனிதன் செயல்களைச் செய்து கொண்டே போவான். இந்தப் பதிவுகளில் நல்ல பதிவுகளும் உள்ளன, துன்பம் விளைவிக்கும் தீயபதிவுகளும் உள்ளன. தீயவற்றைத் தவிர்த்து நல்ல பதிவுகளையே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தீய பதிவுகள் அவ்வப்பொழுது தோன்றித் தீய செயல்களைச் செய்ய வைத்து, அதன் மூலமாகத் துன்பங்களை மனிதன் அடைய வேண்டியிருக்கும். இவ்வாறு வாழ்வின் நோக்கத்திற்கு முரணான தீயபதிவுகள் அதிகரித்துக் கொண்டே போனால் பிறவிகள் பல பெருங்கடலாக நீளும். வாழ்வில் சலிப்புதான் ஏற்படும்.
அப்படியின்றி, துன்பத்திற்கு முடிவு கட்ட வேண்டும். வேண்டாத பதிவுகளை மாற்றியமைக்க வேண்டும். இந்த விஷயத்தில் தான் இன்று பழக்கத்திற்கும், விளக்கத்திற்குமிடையே மனிதன் போராடிக் கொண்டிருக்கின்றான்.
எண்ணம், சொல், செயல் ஆகிய இம்மூன்றிலான பழக்கப் பதிவுகளிலிருந்து மனிதன் விடுபட்டு, தான் விரும்பிய நல்வழியில் செல்ல அவனுக்கு முறையான உளப்பயிற்சி முறை வேண்டும். அதைத்தான் நமது சித்தர் பெருமான் திருமூலர் ஒரு கவியில்,
"திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்க இருவழி யுண்டு
தனக்கும் கிளைக்கும்அக் கேடில் முதல்வன்
விளைக்கும் தவம்அறம் மேற்றுணை யாமே.
என்று குறிப்புட்டுள்ளார்.
வாழ்க்கை என்ற சிறிய தோணியைப் பற்றிக் கொண்டு கடல் போன்ற வினையை கடக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ள மனிதன், அதிலிருந்து வெளிவர இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று தவம்; மற்றொன்று அறம். இவையிரண்டையும் செய்தால் அவன் மாத்திரம் அல்லாமல் அவனுக்குப் பின்வரும் சந்ததிகளும் நன்மை பெறுவார்கள் என்கிறார்.
மனதை உயிர்மேல் வைத்து, ஒடுங்கி நின்று தவம் செய்யும் பொழுது, மன அலை விரைவு குறைந்து, உயிரின் தன்மையை உணர்கிறான். வினையின் பதிவுகள் அவற்றின் பிரதிபலிப்புகள் இவற்றை உணர்கிறான். தகாத தீய வினைப்பதிவின் காரணமாக உடலிலே வரக்கூடிய நோய்களையும், மனதில் வரக்கூடிய களங்கங்களையும் அறிந்து அறநெறி மூலம் அகற்றிக் கொள்கிறான்.
மனிதன் மனிதனாக வாழவேண்டுமானால் அதற்கு முறைப்படுத்தப்பட்ட உளப்பயிற்சி வேண்டும். அப்பயிற்சிக்குத்தான் அகத்தவம் என்று பெயர். அகத்தவமின்றி மன அலைச் சுழல் குறையாது. விளைவறிந்த விழிப்புநிலை வராது. பதிவு நீக்கம் பெற முடியாது. வீடுபேற்று நிலைகிட்டாது. வாழ்வின் நோக்கம் நிறைவேறாது. ஆகவே நல்வாழ்வு பெற அகத்தவம் மிக மிக அவசியம்.
சிக்கல்களில் அகப்பட்டுக் கொள்ள காரணம் என்ன?
கேள்வி : அருள்தந்தை அவர்களே, ஆன்மீக வழியிலே நமது வாழ்க்கையை வகுத்துக் கொண்டாலும், சில சமயங்களில் சிக்கல்களில் அகப்பட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறதே - இதற்குக் காரணம் என்ன? இதை மாற்ற வழி இல்லையா?
மகரிஷியின் பதில் : மனித வாழ்க்கையில் துன்பமும், துயரமும் நேர்வதற்கு 3 சூழ்நிலைகள் உள்ளன.
அவை :
1) ஆகாம்ய கர்மம்,...
2) பிராரப்த கர்மம்,
3) சஞ்சித கர்மம்.
சஞ்சித மர்மம் என்பது நமது முன்னோர்கள் செய்த புண்ணிய பாவத்தின் தொகுப்பாகும். அவை வழி வழியாகச் சந்ததிகளுக்கு வந்து சேரும் வினைப்பதிவாகும். எனவேதான் ஒரு மனிதனானவன் தான் எந்தத் தவறும் செய்யாவிட்டாலும் கூட துன்பமும் தூரமும் அவனது வாழ்க்கையில் உண்டாகித் கொண்டிருக்கின்றன. சஞ்சித கர்ம வினைப்பதிவுகளைத் தீர்த்துக் கொள்ள கீழ்க்காணும் மூன்று வழிகள் உள்ளன.
அவை :
1) பிராயச்சித்தம்
2) மேல்பதிவு
3) தவம்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.