*ஞானக் களஞ்சியம் கவிகள்*
*- வேதாத்திரிய தத்துவ விளக்க உரைகள்*
*குருவணக்கம்*
*அருள்துறைக்கு நேர்வழி (12-10-1987)*
*கவி: 4*
முட்டைக்குள் அமைந்தகரு உடலாலும் உயிராலும் வளர்ச்சி பெற்றால்
மூடிய ஓடுடைந்துவிடும்; குஞ்சு வெளிஉலகைக் கண்டின்பம் துய்க்கும்;
திட்டமிட்டு அறம் ஆற்றித் தூய்மை அறிவில் உடலில் பெற்று விட்டால்
தீரும்வினை; புலன்மயக்கம் தாண்டிடலாம்; தீய வினைப்பதிவு எல்லாம்
விட்டுவிடும்; விளைவாக வீடுபேறெனும் அறிவையறிதல் கிட்டும்.
வினைப்பயனைப் போக்காமல் வீட்டையடைய விரும்புவதோ பொருந்திடாது.
தட்டுங்கள் திறக்குமென்றார் தனக்குள்ளேயே பேராற்றல் புதையல்கண்டோர்
தக்கவழிஅருட்குருவின் தாள்பனிந்து தவம்பயின்று தனை உணர்தல்.
*தத்துவஞானி வேதாத்திரி மகரிசி*
அண்டம் என்றால் பேரியக்க மண்டலம் எனும் பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் ஆகும். எண்ணிலடங்காத கோள்களில் ஒன்று புவி அண்டம் எனும் பூவுலகம். இந்த உலகம் தோன்றி சுமார் 450 கோடி ஆண்டுகள் ஆவதாகவும் முதல் உயிரினம் என்று கூறப்படும் அமீபா, ஒரு செல் நீர்வாழ் ஜீவன் தோன்றி சுமார் 57 கோடி ஆண்டுகள் ஆவதாகவும், முதல் மனிதர் தோன்றி சுமார் 65 லட்சம் ஆண்டுகள் ஆவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இறைநிலையானது தன்நிலையில் மாற்றம் பெற்று பிரபஞ்சத் தோற்றமாகியதில் சடப்பொருட்களில் அதன் தன்மையாகவும், சீவ இனங்களில் மனமாகவும், மனிதனில் ஆறாவது அறிவாகவும் மலர்ச்சி பெற்றுள்ளது.
முதல் மனிதரிலிருந்து இன்றுள்ள மனிதன்வரை சங்கிலித்தொடர் போல, எங்கேயும் விட்டுப் போகாமல் வித்தின் வழியே மனிதகுலம் வந்து கொண்டுள்ளது. பல கோடிப் பிறவி எடுத்த மனிதர்க்கு உயிரின் நிலை என்ன? கடவுள் யார்? அல்லது எது? என்ற கேள்விகள் எழுவது இயல்பு. காரணம், தனது மூலத்தை அறிய விரும்பும் உயிரின் எழுச்சியேயாகும். சரியான வழிகாட்டல் வழிநடத்தல் இருக்குமேயானால், தன்னையும் அறியலாம் எல்லாவற்றையும் அறியலாம். தன்னை அறிதல் என்றால் சரியான குருவின் மூலம் உபதேசம் பெற்று தவத்தின்மூலம் மனதை அறியலாம்.
மனம் என்பதோ இன்ப, துன்ப உணர்வுடையது. அதனைக்கடக்க மனதை ஓர்மை நிலைக்குக் கொண்டுவர வேண்டும். மனதிற்கு மூலமாயிருப்பது உயிர். ஆகவே மனதை அமைதி நிலைக்குக் கொண்டுவர உயிர்மேல் மனம் செலுத்துவது என்ற செயல் தவம், தியானம், யோகா, மெடிடேசன் என்ற வார்த்தைகளால் பேசப்படுகிறது. உயிரை உணர்ந்த பெரியார்கள் சிறப்பாக உயிரை குண்டலினி என்றனர். உயிர்ச்சக்தியை குண்டலினி சக்தி என்றனர். தியானத்தின்மூலம் உணரும்போது, நிலையில் அறிவாக இருப்பதே அலையில் மனமுமாக இருக்கிறது. அந்த அறிவுதான் தெய்வம். அது எல்லாவற்றிலும் நீக்கமற அன்பாக உள்ளதை, உணர்த்திய குருவும் தெய்வமே என்ற விளக்க, எல்லாவற்றையும் உணர்த்தவல்லது
*விளக்க உரை: மு.நி.பேரா. இரா.மாரியம்மாள் மோகன்தாஸ்*
வேதலோக அன்பு நிலையம் அறக்கட்டளை
K.Pudur MVKM Trust. Madurai
www.facebook.com/vethathiri.gnanam