வாழ்க வளமுடன்.
அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்.
பாகம் : 10
சென்னைத் தலைமையகத்தில் அருட்தந்தை அவர்கள் மேற்கொண்ட ஆன்மீக சேவைகள் :-
தலைமையகம் சொந்தக் கட்டிடத்தில் செயல்படத் தொடங்கிய போது (1983 ஆம் ஆண்டில்) சென்னையின் பிற பகுதிகளிலிருந்து திருவான்மியூர் செல்வதற்குப் பேருந்து வசதிகள் மிகவும் குறைவாக இருந்தன. மேலும், திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து நமது தலைமையகம் சுமார் ஒரு கி.மீ தொலைவில் இருப்பதால், தலைமையகத்திற்கு வருபவர்கள் நடந்து வர வேண்டும். அக்காலக் கட்டத்தில் ஆட்டோ வசதியும் மிகவும் குறைவாக இருந்தது.
எனவே, தலைமையகத்திற்குப் பயிற்சிக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மேலும், தலைமையகத்தில் முழுநேர ஆன்மீக சேவை செய்வதற்கு ஆசிரியர்கள் இல்லை. எனவே, தலைமையகத்திற்குப் பயிற்சியைக் கற்றுக் கொள்ள வருபவருக்கு, பகல் வேளையில் அருட்தந்தை அவர்கள் தான், பயிற்சியாளர்களின் நிலைக்கு (stage) ஏற்ப, ஆக்கினை, சாந்தி, துரிய தீட்சை அளிப்பார்கள். சில அன்பர்கள் தமது மற்றும் குடும்பம் தொடர்பான செய்திகளை அருட்தந்தை அவர்களிடம் கூறி, அவர்களது மேம்பாட்டிற்கான ஆலோசனைகளையும் அருட்தந்தை அவர்களிடம் கேட்டுப் பயன்பெறுவார்கள்.
தலைமையைத்தில் அருட்தந்தை அவர்கள் துரியாதீதம் தீட்சை அளித்தல்.
1990 ஆம் ஆண்டு வரை அருட்தந்தை அவர்கள் தான் துரியாதீத தீட்சை அளித்தார்கள். அருட்தந்தை அவர்கள் சென்னைத் தலைமையகத்தில் தங்கியிருந்த நாட்களில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் செயல்பட்ட மனவளக்கலை மன்றங்களில் பயிற்சி பெற்ற அன்பர்களில் துரியாதீத தீட்சைப் பெறுவதற்குத் தகுதிபெற்ற அன்பர்களுக்குத் துரியாதீத தீட்சையளிப்பார்கள்.
அருட்தந்தை அவர்கள் துரியாதீத தீட்சை அளித்த முறை.
தீட்சை அளிக்கத் தொடங்குவதற்கு முன்பு சுமார் 30 நிமிடங்கள் முன்பு துரியாதீத தவ விளக்கத்தைப் பற்றிய விளக்கத்தை அளிப்பார்கள். பின்பு, இந்தத் தவத்தை செய்யக் கூடிய முறையைப் பற்றிக் கூறுவார்கள்.
ஆசிரியர்களின் (அருள்நிதியர்களின்) எண்ணிக்கை குறைவாக இருந்த அந்தக் காலக் கட்டத்தில், ஆக்கினை, துரியம், துவாதசாங்கம் ஆகிய நிலைகளில் அருட்தந்தை அவர்களே முறைப்படி ஒவ்வொரு நிலையிலும் தவ ஆற்றலைக் கூட்டுவதற்கு ஒவ்வொருவருக்கும் உதவுவார்கள்.
பின்பு, தனது தெய்வீக எண்ணத்தின் மூலம் சந்திரன், சூரியன், பேரியக்க மண்டலம் (சக்தி களம்) மற்றும் சுத்தவெளி (சிவகளம்) ஆகிய ஒவ்வொரு நிலையிலும் பயிற்சியாளர்களின் மனதைக் கொண்டு சென்று, ஒவ்வொரு நிலையிலும் மனம் அடையும் அனுபவங்களையும் பின் வருமாறு கூறுவார்கள்.
சந்திரன் : இப்போது உங்கள் மனதை நில உலகிலிருந்து இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள சந்திரனோடு இணைத்துத் தவம் செய்கிறீர்கள். திவ்யமான சந்திர காந்த ஆற்றல் உங்கள் உடம்பையும், உயிரையும் (ஆன்மாவையும்) தூய்மை செய்யட்டும். மேன்மை அளிக்கட்டும்.
சூரியன் : தற்போது உங்களது மனதை நில உலகிலிருந்து ஒன்பது கோடி மைல்கள் தொலைவில் இருக்கக்கூடிய சூரியனோடு இணைத்துத் தவம் செய்கிறீர்கள்.
எனவே, உங்கள் மனத்தில் உடலுணர்வுத் தொடர்பான எண்ணங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை.
தொடரும்....