Wednesday, 13 March 2019

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்.

பாகம் : 3

அருட்தந்தை அவர்களின் ஒப்பற்ற நம்பிக்கை ( self confidence )

அருட்தந்தை அவர்கள் 1983 ஆம் ஆண்டில், ஒரு நாள் வாடகை இல்லத்தில் நடைப்பெற்ற கூட்டுத் தவத்தை நடத்தி முடித்த பிறகு, ஆழியாறு அறிவுத் திருக்கோயில் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து விட்டதாகவும், அந்த இடத்தில் ஓங்கார வடிவத்தில் அறிவுத் திருக்கோயில் அமைக்கப்பட உள்ளது எனவும் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.

என்னைப் போன்று 'குருவின் வாக்கு வேத வாக்கு' என்ற எண்ணம் கொண்டவர்கள் அறிவுத் திருக்கோயில் நிச்சயமாக அமைக்கப்படும் என்று நம்பினோம்.

ஆனால், தவத்தில் கலந்து கொண்ட சில அன்பர்கள், "அன்றைய உலக சமுதாய சங்க பொருளாதார நிலையில், அதிக செலவில் ஆழியாறு அறிவுத் திருக்கோயில் அமைப்பது இயலாத செயல்" என்ற கருத்தை சங்கத்திற்கு வெளியே வந்த பிறகு பிற அன்பர்களிடம் கூறிக் கொண்டிருந்தார்கள்.

அருட்தந்தை அவர்கள் அடுத்த நாள் நடத்திய கூட்டுத்தவம் நிறைவுப் பெற்றப் பிறகு, பிறருடைய எண்ணத்தை அறிதல் ( mind reading ) என்ற கலையை அறிந்தவர் என்ற முறையில் பின் வருமாறு கூறினார்கள்.

"இதற்கு முந்தைய கூட்டுத் தவத்திற்குப் பிறகு ஆழியாறில் அறிவுத் திருக்கோயில் அமைப்பது பற்றி உங்களிடம் சொன்னேன். இங்கே இருக்கும் சில அன்பர்களுக்கு இந்தத் திட்டப்பணி நடந்தேறும் என்பதில் நம்பிக்கையில்லை என அறிகிறேன்.

எந்தத் திட்டப் பணியை மேற்கொண்டாலும் ( உ.ம் : வீடு கட்டுதல் ) முதலில் திட்டமிடுபவர் மனதில் செயல் திட்டத்தின் முடிவில் நாம் பெறக்கூடிய விளைப்பயன் ( product) ஒரு கற்பனையாகத்
தான் இருக்கும்.
அடுத்த கட்டம், அறிவுத் திருக்கோயில் அமைப்பதற்கான நிழற்பட திட்ட வரைவு (blueprint) தயாரித்த பிறகு, அப்போது நமது மனதில் அறிவுத் திருக்கோயில் அகக்காட்சியாகத் ( visual) தெரியும். கட்டிடப் பணி முடிந்த பிறகு உண்மையான அறிவுத் திருக்கோயிலைக் கண்ணால் பார்க்க முடியும்.

எந்த ஒரு திட்டப் பணிக்கும் imagination, visualisation, actualization (actual result) ஆகிய மூன்று கட்டங்கள் உண்டு.

இப்போது முதல் கட்டப் பணிகள் முடிந்து விட்டன. படிப்படியாக மீதி இரண்டு கட்டப் பணிகளும் முடிவுற்று, நாம் அறிவுத் திருக்கோயிலைக் காண உள்ளோம்."

அருட்தந்தை அவர்களின் வலுவான தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் இந்த உரை அமைந்தது.

No comments: