Saturday, 16 March 2019

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்.

பாகம் : 6

ஆழியாறு அறிவுத் திருக்கோயிலை அமைப்பதற்கான இடத்தைப் பெறுவதற்கு இறையாற்றல் ஏற்படுத்தித் தந்த சூழ்நிலைகள்.

அருட்தந்தை அவர்கள் 1983 ஆம் ஆண்டில், கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகரில் ஒரு வார அகத்தாய்வுப் பயிற்சியை நடத்தினார்கள்.

இந்தப் பயிற்சியில் அருள்நிதி M.சின்னசாமி அவர்களும், அவர்களது அன்புத் துணைவியார் மனோரமா அம்மா அவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். பயிற்சி நிறைவுப் பெற்ற அன்று அருள்நிதி சின்னசாமி அய்யா தம்பதியர் அவர்களது இல்லத்திற்கு வருமாறு அருட்தந்தை அவர்களை அன்புடன் கேட்டுக் கொண்டார்கள்.

அவர்களது அழைப்பை ஏற்று அருட்தந்தை திரு.M. சின்னசாமி அய்யா அவர்களின் இல்லத்திற்குச் சென்று, நமது சங்கத்தின் கொள்கைகள் பற்றி சிறிது நேரம் உரையாடினார்கள்.

பிறகு, தமது உள்ளத்தில் பல ஆண்டுகளாகத் தேங்கியிருந்த 'அறிவுத் திருக்கோயிலைப் பற்றிய எண்ணத்தை அருட்தந்தை அவர்கள் கீழ்க்காணுமாறு வெளியிட்டார்கள்.

"ஒரு தூய்மையான தெய்வீக சூழ்நிலையில் ஒரு ஆசிரமம் ஓங்கார வடிவில் அமைக்க வேண்டும். அதற்கு ஏற்ற இடம், ஆறு, மலை இவற்றிற்கு அருகாமையில் இருக்க வேண்டும்" என்று சொன்னார்கள்.

"அந்தப் பணியை என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று சின்னசாமி அவர்கள் கூறினார்கள்.

பிறகு, திரு.M. சின்னசாமி அய்யா அவர்கள் அருட்செல்வர் மகாலிங்கம் அய்யா அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியபோது தனக்கு சொந்தமான இடத்தை அளிப்பதாக சம்மதம் தெரிவித்தார்கள். அருட்செல்வர் அவர்கள் அருட்தந்தை அவர்களையும், திரு.M.சின்னசாமி அய்யா அவர்களையும் அவருக்குச் சொந்தமான இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தற்போது அறிவுத் திருக்கோயில் இருக்கும் இடத்தைக் காண்பித்தார்கள்.

அருட்தந்தை அவர்கள் விரும்பியவாறே சூழ்நிலையைக் கொண்டிருந்ததால் இந்த இடத்தைத் தேர்வு செய்தார்கள்.

தொடரும்....

No comments: