Tuesday, 26 March 2019

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

வாழ்க வளமுடன்

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

பாகம் : 16

துரியாதீத தவம் செய்யும் போது ஒவ்வொரு நிலையிலும் நமது உடல், உயிர், சீவகாந்தம், மனம் (அறிவு) இவை ஒவ்வொன்றும் எவ்வாறு மேம்படுகின்றன என்பது குறித்து அருட்தந்தை அவர்கள் வழங்கியுள்ள விளக்கங்களை உங்களோடுப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மனித மனத்தின் மேம்பாடுகள், மனித மனத்தின் மூன்று நிலைகள் அல்லது உணர்வுகள் மற்றும் நான்கு அனுபவங்கள்.

மனித மனம் உடலுணர்வு, உயிருணர்வு மற்றும் தெய்வீக உணர்வு (இறையுணர்வு) ஆகிய மூன்று நிலைகளில் செயல்படும் திறன் கொண்டது.

உடலுணர்வில் செயல்படும்போது இன்பம், துன்பம் ஆகிய இரு அனுபவங்கள் மட்டுமே மனம் அனுபவிக்க முடியும்.

ஆக்கினை, மற்றும் துரிய தவத்தில் அமைதியை மனம் அனுபவிக்க முடியும்.

பின்பு துரியாதீத தவத்தில் மனம் நிலைக்கும் போது, பேரின்பத்தையும் பேரமைதியையும் மனம் அனுபவிக்க முடியும்.

ஒவ்வொரு மன நிலையிலும் மனச் சுழல் வேகம் வேறுபடுதல்.

உடலுணர்வில் மனம் செயல்படும்போது மனச்சுழல் வேகம் (சீவகாந்த அலையின் வேகம்) வினாடிக்கு 14 முதல் 40 வரை இருக்கும். இதனை ஆங்கிலத்தில் Beta [ 14 - 40 cycle per second (cps) ] என்றும், மருத்துவர்களும் நமது குரு அவர்களும் கூறுவார்கள்.

உயிருணர்வில் மனம் நிலைக்கும்போது (ஆக்கினை மற்றும் துரிய தவத்தில்) மனச் சுழல் வேகம் 8 - 13 என்ற அளவிற்குக் குறைகிறது. இது ஆல்பா (Alpha frequency) என்று அழைக்கப்படுகிறது.

பிறகு, நாம் பேரியக்கக் களத்தில் மனதை வைத்து தவம் செய்யும்போது மனச் சுழல் வேகம் 4 - 7 என்ற அளவுக்குக் குறைகிறது. இது தீட்டா (Theta Frequency) என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில், Universal Consciousness என்று அழைக்கப்படும் பேரியக்க மண்டல உணர்வில் நமது மனம் செயல்படும்.

இறுதியாக பேரியக்க மண்டலத்தைச் சூழ்ந்தும் அதற்கு அப்பாலும் எல்லையற்ற பெருவெளியாக உள்ள சுத்தவெளியில் மனம் இலயிக்கும் போது, மனம் தெய்வீக உணர்வில் இருக்கிறது. அப்போது மனச்சுழல் வேகம் டெல்டா (Delta frequency) 1 - 3 என்ற அளவில் மிகவும் குறைந்த அளவில் செயல்படுகிறது.

No comments: